30.05.2025 – சிவகங்கை.
சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை மேகா புளூமெட்டல்ஸ் குவாரியில் பாறை சரிந்து 6 பேர் பலியானது குறித்த விசாரணை முடிவை மாவட்ட நிர்வாகம் வெளியிடாமல், ‘குவாரிக்குள் போட்ட கல்லாக’ கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.
சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை மேகா புளூ மெட்டல்ஸ் குவாரிக்குள் மே 20 ம் தேதி வெடிவைக்க குழி தோண்டியபோது பாறை சரிந்ததில் அதில் சிக்கி பொக்லைன் டிரைவர் ஒடிசா மாநிலம் ஹர்ஜித் 28, ஓடைப்பட்டி முருகானந்தம் 49, இ.மலம்பட்டி ஆறுமுகம் 50, ஆண்டிச்சாமி 50, குழிச்சிவல்பட்டி கணேசன் 43, துாத்துக்குடி எட்டையபுரம் மைக்கேல்ராஜ் 43, ஆகிய 6 பேர் பலியாகினர்.
கனிம வளத்துறையினர் ‘ட்ரோன்’ மூலம் விபத்து நடந்த குவாரிகள் உட்பட அப்பகுதியில் செயல்படும் 4 குவாரிகளிலும் ஆய்வு செய்தனர். விபத்து நடந்து 10 நாட்களான நிலையில் குவாரியில் விதிப்படி எவ்வளவு ஆழத்திற்கு கற்கள் எடுக்க வேண்டும். கூடுதலாக எத்தனை அடி ஆழத்திற்கு கற்களை தோண்டி எடுத்துள்ளனர். இது போன்று விதிமீறலுக்கு அக்குவாரி உரிமையாளர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்த எந்த அறிவிப்பையும் மாவட்ட நிர்வாகம் வெளியிடாமல், ‘குவாரிக்குள் போட்ட கல்லாக’ விசாரணையை கிடப்பில் போட்டுள்ளனர்.
‘ட்ரோன்’ மூலம் கணக்கெடுத்து விசாரணை நடத்தி வருகிறோம். இது குறித்த அறிக்கையை தேவகோட்டை சப்- கலெக்டருக்கு வழங்கி விடுவோம். அவர் தான் அதற்குரிய அபராத தொகையை விதித்து, அரசுக்கு செலுத்த வைக்க வேண்டும். மேலும் இரு குவாரி லைசென்ஸ்களும் தற்காலிக ரத்து செய்துள்ளோம், என்றனர்.