31.05.2025 – கொழும்பு, இலங்கை.
சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலில் ஈடுபடுபவர்களிடம் கோரிக்கை.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை காரணமாக நிலவும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்தான கடல் நிலைமைகள் குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜெ.கஹவத்த அவர்கள் இது தொடர்பில் மீனவ சமூகத்தை அவதானத்துடன் இருக்குமாறும், விபத்துகளைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிவிப்புக்கமைய, சிலாபம் தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிரதேசத்திலும், அத்துடன் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய ஆபத்து உள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் அலைகள் மூன்று மீட்டர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், இந்தப் பிரதேசங்களில் சிறு மீன்பிடிப் படகுகளும், ஒரு நாள் கடற்றொழில் படகுகளும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
வானிலை எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததன் காரணமாக இதுவரையிலும் சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் கஹவத்த அவர்கள் வலியுறுத்தினார். கடந்த மே 28ஆம் திகதி, சிலாபம் பிரதேசத்திலிருந்து கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற ஒரு நாள் கடற்றொழில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், திருகோணமலைப் பிரதேசத்திலிருந்து மே 28ஆம் திகதி புறப்பட்ட மற்றுமொரு கடற்றொழில் படகு இதுவரையிலும் கரை திரும்பவில்லை. அதில் இருந்த இரண்டு மீனவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. திருகோணமலையில் கடல் நிலைமை மிகவும் கொந்தளிப்பாக இருப்பதால், இந்தப் படகினை தேடுவதற்காக வேறு படகுகளை அனுப்ப முடியாத நிலைமை நிலவுகிறது.
காலியில் ஒரு சிறு மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் மூன்று மீனவர்கள் ஆபத்தில் சிக்கிய போதிலும், இலங்கை விமானப்படையின் உதவியுடன் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை அறிவித்தல்களை கவனத்தில் கொண்டு, இந்த சீரற்ற காலநிலை நிலைமை சீரடையும் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜெ.கஹவத்த அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.