03.06.2025 – தமிழீழம்.
2025 தமிழ் அரசியல் ஒப்பந்தம்: தமிழர் தாயக அரசியல் இனைவின் புதிய வரலாற்று கட்டம்.

குருதியால் எழுதப்பட்ட வரலாற்றின் தொடர்ச்சி
1948 இல் இலங்கையின் சுதந்திரத்திலிருந்து 2009 இல் முள்ளிவாய்க்காளில் நடந்த இன அழிவின் கொடூரமான முடிவுவரை, தமிழ் மக்களின் அரசியல் பயணம் ஒடுக்குமுறைகளாலும் அழிவுகளாலும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கோட்டில், பல முக்கியமான ஒப்பந்தங்கள் தமிழ் அரசியல் திசையை வடிவமைத்தன — 1976 தமிழீழ தீர்மானம், 1985 திம்பு கொள்கைகள், மற்றும் 2002 போர் நிறுத்த ஒப்பந்தம் போன்றவை அனைத்தும் தமிழர் ஒற்றுமையை அடித்தளமாகக் கொண்டவை.
இந்த அடித்தளத்தின் மீது, 2025 ஜூன் 2 ஆம் தேதி, இரண்டு முக்கிய தமிழ் அரசியல் கட்சிகள் — தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (DTNA) — ஒரு புதிய அரசியல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது தமிழர்களின் போராட்டத்தை மீண்டும் வரையறுக்க முயற்சிக்கிறது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்: தமிழ் தேசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துதல்
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய வலியுறுத்தலானது:
13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கு ஏற்றதல்ல என்பதை ஒருமனதாகத் தெரிவிக்கிறது. இது தமிழர் ஆசைகளுக்கு போதுமானதாகவோ ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவோ இல்லை.
தமிழர் தாயக உரிமைகள், வரலாற்று நில உரிமைகள் மற்றும் அரசியல் தன்னரசு உரிமைகளை வலியுறுத்துதல்.
இன்னும் தமிழர் தாயகத்தில் இராணுவமயமாக்கல், சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் இனப்படுகொலை செயல்கள் தொடர்கின்றன என்பதை வெளிப்படுத்துதல்.
2015 முதல் — மைத்திரிபால, கோட்டாபாய, ரணில் ஆகியோர் ஆட்சிகளில் — தமிழர்களுக்கு நீதியோ அரசியல் தீர்வோ கிடைக்கவில்லை என்பதை தெளிவாகக் கூறுதல்.
சர்வதேச சட்டத்தின் திசை
இந்த ஒப்பந்தம் தமிழர் நீதியை சர்வதேச சட்ட அமைப்புகள் மூலம் அடைய ஒரு தெளிவான பாதையை வகுக்கிறது:
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (ICC), மற்றும் சுயாதீன ஐ.நா. வழிமுறைகள் மூலம் கடுமையான கணக்கீடு கோரப்படுகிறது.
பிளவுபடுத்தும் தமிழ் அரசியலை ஒழித்து, ஒற்றுமையான முன்னணியை உருவாக்குதல்.
மிக முக்கியமாக, தமிழ் பிரச்சினை ஒரு “தேசிய தன்னர்சுக் கோரிக்கை” என்பதை உலகம் ஏற்க வேண்டும் என்பதை முன்வைத்தல்.
அரசியலமைப்புசார் வரையறைகள் மற்றும் இந்திய தாக்கம்
இலங்கை அரசியலமைப்பில், 1987 இந்தோ-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 13வது திருத்தம், உண்மையான சுயாட்சி இல்லாமல் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே தருகிறது:
உள்ளூர் அரசாங்கம் மற்றும் நில அதிகாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த ஒப்பந்தம் இந்த கட்டமைப்பை தமிழர் அரசியல் உரிமைகளுக்கு போதுமானதல்ல என வெளிப்படையாக நிராகரிக்கிறது.
இதேநேரம், இந்தியாவின் மௌனம் மற்றும் தெளிவற்ற நிலைப்பாடு தமிழர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் சர்வதேச மத்தியஸ்தம் கோரிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.
புதிய வினாக்கள்: எதிர்காலம் என்ன?
இந்த ஒப்பந்தம் எதிர்கால அரசியல் திட்டமிடலுக்குப் பல வினாக்களை எழுப்புகிறது:
இந்த ஒப்பந்தத்தை மக்கள் ஏற்கிறார்களா?
இது ஒரு “முதன்மை தேசிய ஒப்பந்தம்” என வர்ணிக்கப்படுகிறது, ஆனால் வட்டார அளவில் ஈழத்தமிழர்கள் யாரெல்லாம் உடன்படுகிறார்கள் என்பது முக்கியமானது.
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமா?
2025 பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்த ஒப்பந்தம் ஒருங்கிணைந்த தமிழ் அரசியல் கூட்டணியாக மாறுமா என்பது கவனிக்க வேண்டிய விடயம்.
புதிய தலைமுறை இவ்வாறான ஒப்பந்தங்களை ஏற்கிறதா?
புதிய தலைமுறையின் மனநிலை, புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு, மற்றும் ஈழத் தேசிய இன உணர்வின் மீள்பிறப்பு இதன் வெற்றியை தீர்மானிக்கும்.
முடிவுரை: ஒப்பந்தத்திலிருந்து விடுதலைக்கான வழி?
இந்த 2025 ஒப்பந்தம், தமிழ் அரசியலில் ஒரு தீர்மானக் கட்டமாக அமைகிறது. ஒற்றுமை, வரலாற்றுச் சிந்தனை, சர்வதேச அரசியலியல், மற்றும் வருங்கால அரசியல் சுயாதீனப்போராட்டத்திற்கு இது ஒரு முக்கிய அடித்தளம்.
இது வெறும் கட்சி ஒப்பந்தமல்ல. இது ஒரு இனத்தின் மீள்பிறப்புக்கான குரல். ஆனால் அது செயல்படுத்தப்பட வேண்டியது மக்கள் அடிப்படையிலான ஒற்றுமையோடும், சர்வதேச ஆதரவோடும், தெளிவான அரசியல் கட்டமைப்போடும் இருக்க வேண்டும்.
– ஈழத்து நிலவன்.
03/06/2025.

தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கிடையிலான ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
02 யூன் 2025
சுதந்திர இலங்கைத் தீவில் கடந்த 77 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் தேசம் தனது அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தும் விதத்திலும் தன்னுடைய தனித்துவம், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தனது மரபுவழித் தாயகத்தில் ஒரு தனியான தேசம் என்ற அடிப்படையில் தனது பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனது விவகாரங்களைத் தானே கையாளக்கூடிய விதத்திலும் தனது சுதந்திரத்தை நிலைநிறுத்தும் வகையிலும் பூரண பொறுப்புவாய்ந்த ஒரு சுயாட்சி அரசியல் ஆட்சி முறையைப் பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையது என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலும், இந்த இலக்கினை அடைவதற்கு தமிழ்த் தேசத்தினால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்திருக்கும் ஒற்றையாட்சி எனப்படும் அரசியல் ஆட்சி முறையின் எந்தவொரு ஏற்பாட்டின் கீழும் அறவே இடமில்லை என்பதுடன் பூரண சுயாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்றினை, தமிழ்த் தேசத்தின் மரபுவழித் தாயகத்தில், இலங்கைத் தீவு என்ற யாதார்த்த ரீதியான வரையறைக்குள் ஏற்படுத்துவதற்கு, ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நாம் தீர்மானித்துள்ளோம் என்பதையும் பிரகடனப்படுத்துகின்றோம். இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கு நிலையானதும் நீதியானதுமான அரசியல் தீர்வு என்பது ஒரு புதிய அரசியல் சாசனத்தை திட்டவட்டமானதும் தெளிவானதுமான முறையில் உள்ளடக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக, தமிழ்த் தேசத்தின் அரசியல் ஒற்றுமையை தமிழ்த் தேசிய சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கி ஏற்படுத்தப்படுகின்றது.
1. தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழ்த் தேசத்தின் இறைமையின் பாற்பட்டும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மரபுவழித் தாயகத்தில், ஒரு பூரணமான சம்ஸ்டி ஆட்சி முறை, அரசியல்சாசன ரீதியாக ஏற்படுத்தப்படுவதே தமிழ்த் தேசத்தின் இறைமையை ஏற்பதாகவும் தியாகம் செறிந்ததுமான நீண்ட விடுதலைப் போராட்டத்தின் அர்த்தமுள்ள அங்கீகாரமாகவும் இருக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம். மேலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எமது முஸ்லிம் சகோதரர்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் நிலைநிறுத்தும் விதத்தில் அரசியல் சாசன ரீதியானவையும், வலுவானவையுமான அரசியல் நிர்வாக ஏற்பாடுகள், முஸ்லிம் சமூகத்தின் சம்மதத்துடனும் இணக்கப்பாட்டுடனும் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
2. அரசியல் யாப்பிற்கான 13 ஆவது திருத்தம் என்பது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையானதோ இறுதியானதோ தீர்வு அல்ல என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம்.
3. கடந்த 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கத்தின் அரசியல் நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன வரைபு என்பது, ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்ற காரணத்தால் தமிழ்த் தேசத்தின் சுயாட்சிக்கு இடமளிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அதனை நாங்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளோம் என்பதனை இருதரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம்.
4. போரின் போதும் அதற்குப் பின்னும் இழைக்கப்பட்ட மற்றும் இழைக்கப் பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பில், உள்ளகப் பொறிமுறைகளை முழுமையாக நிராகரித்துச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை ஒன்று அவசியமானது என்பதனை இரு தரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம்.
(Page 1 of 2)

5. இந்த இலட்சியப் பயணத்தில் தமிழ் தேசத்தின் நலனை விரும்பும் சகல தமிழ்த் தேசிய சக்திகளும் நேர்மையாகவும், விரைவாகவும் இணைத்துக் கொள்ளப்படுவதற்குச் சாத்தியமான சகல முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம்.
6. இந்த அடிப்படையில் பிரதிநிதித்துவ ஆட்சி முறை ஒன்றின் கீழ் கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும், தமிழ்த் தேசியம் சார்ந்து நேர்மையாக செயற்படும் சக்திகள் ஒன்றிணைந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், அதே நேரத்தில் இலங்கைக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் புலம் பெயர் ஈழத் தமிழர்கள் மற்றும் பரந்த தமிழர் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரதும் ஒருமித்த ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம். இந்த அடிப்படையில் இந்த முயற்சிகளுக்கு எமது மக்கள் அனைவரினதும் ஆதரவையம் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் நாங்கள் நாடி நிற்கின்றோம்.
7. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வலியுறுத்துவதிலும் அரசியல் சாசன ரீதியாக அவற்றை நிலைநாட்டிக் கொள்வதிலும் தமிழ் மக்கள் நேர்மையாகவும் உறுதியாகவும் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளனர். தமிழ் மக்களின் முழுமையான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக எதிர்காலத்தில் நேர்மையுடனும் கொள்கை உறுதியுடனும் தமிழர் தேசத்தின் அரசியல் செயல்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே பல்வேறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் வெகுசன அமைப்புகளும் ஒருங்கிணைந்து, மக்களின் பங்கேற்புடன் தயாரித்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொள்ளமுடியும் என நாம் கருதுகின்றோம்.
8. இந்தக் குறிக்கோளை ஜனநாயக ரீதியான செயற்பாடுகளாலும், மக்கள் எழுச்சியினாலுமே சாதிக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி, ஒரு பரந்த ஜனநாயக அரசியல் கட்டமைப்பாகவும், இந்த இலக்கினை முன்வைத்து சகல தமிழ்த் தேசிய சக்திகளையும் ஒன்றிணைத்துச் சாத்தியமான விதத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும், அதை முன்னெடுத்துச் செல்வதற்கும் எமது மக்களின் ஆதரவினை நாடிநிற்கின்றோம்.
9. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இரண்டு தரப்பினரும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
தமிழ்த் தேசியப் பேரவை
நாகலிங்கம் இரட்ணலிங்கம்
செயலாளர்
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
இப் புரிந்துணர்வு ஒப்பந்தம் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள ரில்கோ விடுதியில் 2025 யூன் 02 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்டது.
(Page 2 of 2)
