03.06.2025 – கொழும்பு.
வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் எதிர்காலம் கருதி அவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கும் நோக்கிலும் ஜேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், கிளிநொச்சி அறிவியல் நகரில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனம் நோக்கம் தவறி, கொழும்பிலுள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் கீழ் தன்னிலை இழந்து வருவதாக தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் உயர்கல்வி அமைச்சரான பிரதமரிடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03.06.2025) நிலையியற் கட்டளை 27/ 2 இன் கீழ், பிரதம அமைச்சரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் எதிர்காலம் கருதியும், அவர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்கும் நோக்கிலும் ஜேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், கிளிநொச்சி அறிவியல் நகரில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனம் (SLGTTI), அதன் நோக்கம் தவறி, கொழும்பிலுள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் கீழ் தன்னிலை இழந்து வருவதை அமைச்சர் அறிவாரா?,
இந்நிறுவனத்தில் எத்தனை தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் தற்போது பயிற்சி பெறுகிறார்கள் என்பதையும், அவர்கள் எந்த அடிப்படையில் பயிற்சிநெறிகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என்பதையும், தற்போது என்னென்ன பயிற்சிநெறிகள் நடைமுறையில் உள்ளன என்பதையும் அமைச்சர் அறிவிப்பாரா? மநற வளத்திலும், தரத்திலும் மிகவும் தாழ்நிலையிலுள்ள கிளிநொச்சி மாவட்ட (SLGTTI),நிறுவனத்தை அங்கீகரிப்பதற்கான அரசாங்க வர்த்தமானி ஏன் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதை அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
இந்நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் பௌதீக வள மற்றும் ஆளணிப் பற்றாக்குறைகள் எப்போது நிவர்த்தி செய்யப்படும் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா? இந்நிறுவனம் உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீனமாகவும், தனித்தன்மையோடும் இயங்குவதற்கான அடிப்படை வசதிகள் எப்போது ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்பதையும், இந்த நிறுவனத்தை அங்கீகரிப்பதற்கான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்படும் என்பதையும் அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிப்பாரா?என கேள்வியெழுப்பினார்.