சென்னை –
‘தமிழ் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை, ரயில்வே துறையில் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘தமிழ் ஏ.ஜ.,’ தொடர்பான நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.
அவர், வணக்கம்.. எப்படி இருக்கீங்க ? என தமிழில் உரையை தொடங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பதற்கான மிக முக்கிய மையமாகத் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் இருந்து உருவாகும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை இந்தியா முழுவதுமே பயன்படுத்துவது மகிழ்ச்சி.
மின்னணு பொருட்களின் உற்பத்தி மையமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம். மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட உற்பத்தி தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும்.
மின்னணு துறையின் தலைமையகமாக தமிழகத்தை உருவாக்க பிரதமர் மோடி செயலாற்றி வருகிறார். இதுவே பிரதமர் மோடியின் தொலை நோக்குப் பார்வை. தமிழ் ஏ. ஐ., ரயில்வே துறையில் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.
நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில செயலாளரும், தமிழ் ஏ.ஐ., திட்டத்தின் நிறுவன தலைவருமான அஸ்வத்தாமன் வரவேற்றார். தொழில்நுட்ப நிபுணர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் விழாவில் பங்கேற்றனர்.