போர்ட் ஆப் ஸ்பெயின்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 29. கடந்த 2016ல் பாகிஸ்தானுக்கு எதிரான துபாய் ‘டி-20’ போட்டியில் அறிமுகம் ஆனார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது 100வது சர்வதேச ‘டி-20’ல் பங்கேற்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ‘டி-20’ போட்டியில் விளையாடிய, அதிக ரன் எடுத்த வீரர் இவர். இதுவரை 106 போட்டியில் 2275 ரன் எடுத்திருந்தார்.
2019ல் இங்கிலாந்துக்கு எதிரான பிரிட்ஜ்டவுன் ஒருநாள் போட்டியில் (61ல் 1983 ரன்) அறிமுகம் ஆனார். 2024ல் அதிக சிக்சர் (170) அடித்த வீரர் பூரன். தவிர 2025 பிரிமியர் தொடரில் லக்னோ அணிக்காக 524 ரன் விளாசினார்.
அடுத்து ஆண்டு நடக்கவுள்ள ‘டி-20’ உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முக்கிய உதவியாக இருப்பார் என நம்பப்பட்டது.
தற்போது திடீரென சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பிரிமியர் உட்பட பல்வேறு ‘டி-20’ லீக் தொடர்களில் மட்டும் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து நிக்கோலஸ் பூரன் வெளியிட்ட அறிக்கை:
எனக்குப் பிடித்த விளையாட்டு கிரிக்கெட். இது நிறைய கொடுத்துள்ளது. நீண்ட யோசனைக்குப் பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என முடிவு செய்துள்ளேன்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது, கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தது போன்ற சம்பவங்களை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.
கடினமான தருணங்களில் ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றி. சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும், வெஸ்ட் இண்டீஸ் மீதான அன்பு என்றும் குறையாது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.