தெஹ்ரான்:
இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் உயிரிழந்தனர்.
ஈரானில் அணு ஆயுத மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிகின்றன.
இஸ்ரேலில் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈரானும் கடும் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஈரானில் அணு ஆயுத மையங்கள் அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சே அத்ரே கூறியதாவது;
அனைத்து ஈரான் குடிமக்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அணு ஆயுத மையங்கள் அருகில் வசிக்கும் மக்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.
மேலும் மறு அறிவிப்பு வரும் வரை திரும்பி வரக்கூடாது. இந்த பகுதியில் வசித்து வருவது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.