யாழ். –
வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்தே நிகழ்ச்சி நிரலில் யாழ். விஜயம் உள்வாங்கப்பட்டதாகத் தகவல்.
அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கொழும்பில் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தவிருப்பதுடன் கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் ‘பொறுப்புக்கூறல் செயற்திட்டம்’ முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐக்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 – 26 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் என்ற கரிசனையின் அடிப்படையில் அவரை இப்போது நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி உள்நாட்டில் இயங்கிவரும் 104 சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நான்கு தரப்புக்கள் தனித்தனியாக 4 கடிதங்களை உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்திருந்தன.
இருப்பினும் அவரது வருகை பெருமளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன்போது அவர் கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், தலைநகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.
அதனைத்தொடர்ந்து கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகப்பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள அவர், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை இலங்கைக்கு வருகைதரும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்யுமாறுகோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்த போதிலும், அவரது முள்ளிவாய்க்கால் விஜயம் இன்னமும் உறுதியாகவில்லை.
மேலும் ஆரம்பத்தில் 23 – 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு திட்டமிடப்பட்டிருந்த அவரது விஜயத்தில் யாழ் விஜயம் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை எனவும், பின்னர் சிவில் சமூகப்பிரதிநிதிகள் மத்தியில் வலுவடைந்த எதிர்ப்பை அடுத்தே அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதி 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு, அதில் யாழ் விஜயமும் உள்வாங்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.