தமிழீழம்
சதாசிவம் அகிலேஸ்வரி அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு


தமிழீழத் தாயக விடுதலைப்பற்றோடு, போராளிகளை அன்புடன் அரவணைத்து, ஆதரவளித்த சதாசிவம் அகிலேஸ்வரி அவர்கள், 09.04.2025 அன்று உடல் நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்திஎமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஆழமான பற்றுதலோடு, போராளிகளை அரவணைத்து, உணவளித்து, அரணாகக் காத்துநின்ற தாய் இவர். நெருக்கடியான காலங்களிலெல்லாம் தனது குடும்பத்திற்கு வரக்கூடிய ஆபத்துகளைப் புறந்தள்ளி, ஓர் அன்னையாகப் போராளிகளைப் பாதுகாத்ததோடு, பசியோடுவரும் அத்தனை போராளிகளிற்கும் உணவளித்து, தேசவிடுதலைக்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த உன்னதமானவர்.
இராணுவம் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து, அடக்குமுறையினைக் கட்டவிழ்த்து கொடூரமான முறையில் படுகொலைகளை நிகழ்த்தியதோடு, போராளிகளையும், ஆதரவளித்தவர்களையும் அரணாக நின்று காத்தவர்களையும் தேடியலைந்த மிகநெருக்கடியான அக்காலத்தில், தன்னுயிரைப் பாராது போராளிகளைக் காத்துநின்ற வீரத்தாயாவார்.
அமைதியான சுபாவமும் சிரித்தமுகத்தோடும் அனைவரோடும் இனிமையாகப் பழகும் தன்மையும் எளிமையான பண்பும் கொண்ட இவர், எந்த வேளையிலும் போராளிகளின் வருகையினை எதிர்பார்த்தவர் போல, வருகின்ற அனைவரையும் அரவணைத்து உணவளித்து தாயகவிடுதலைக்கு உரமேற்றிய அபூர்வத்தாயாவார்.
தமிழீழ விடுதலைப்போராட்டம் அடுத்தகட்ட வளர்ச்சியினை எட்டிய காலமதில் தமிழீழத்திற்கு வெளியே, போராளிகளிற்கான தங்குமிடங்களையும் நடவடிக்கைக்கான உதவிகளையும் செய்து கொடுத்ததோடு, அச்சமின்றி உணர்வெழுச்சியோடு மறைமுகப் பணியினை செய்த துணிச்சல் மிக்க தாயாவார்.
2009ஆம் ஆண்டிற்குப் பின்னரான சூழலிலும் தமிழீழத் தேச விடுதலையினை அகத்தினில் சுமந்து,போரின்வடுக்களைப் புறந்தள்ளி,மாவீரர்களின் ஈகத்தின் வழிநின்று இறுதிவரை பயணித்தவராவார்.
போராட்டக்காலங்களில் போராளிகளின் தேவைகளையும் நெருக்கடிகளையும் அவர்களின் மனவுணர்வைப் புரிந்து தேசவிடுதலை நோக்கி உறுதியோடு பயணிக்க உரமூட்டியவராவர்.
தமிழீழத் தேசியத்தலைவர் மீதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீதும் ஆழமான பற்றுதல் கொண்டு, போராட்டத்தின் ஆரம்ப காலம் தொடக்கம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, மிகப்பெரும் பலம் சேர்த்த தமிழீழத்தின் பாசமிகு தாயான சதாசிவம் அகிலேஸ்வரி அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், சதாசிவம் அகிலேஸ்வரி அவர்களின் விடுதலைப்பற்றிற்காகவும் விடுதலைக்கு ஆற்றிய பணிக்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.