டேராடூன்:
கேதார்நாத்திற்கு சிவன் வழிபாட்டிற்காக, ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களிலிருந்து எண்ணற்ற பக்தர்கள் சென்று தரிசித்து வருகின்றனர். இன்று பக்தர்கள் கேதார்நாத் மலையேற்றப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இருவர் பலியானார்கள். 3 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ருத்ரபிரயாக் எஸ்.பி.,அக்ஷய் பிரஹ்லாத் கோண்டே கூறியதாவது:
சம்பவம் குறித்த தகவல் அறிந்தவுடன், காவல்துறை மற்றும் டி.டி.ஆர்.எப். பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கயிறுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். காயமடைந்தவர்களில் ஒரு பெண் லேசான காயத்துடன் மீட்கப்பட்டார். மற்ற இரு ஆண்களும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் கவுரிகண்ட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. – இவ்வாறு அக்ஷய் பிரஹ்லாத் கோண்டே கூறினார்.