லீட்ஸ் –
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) நான்காவது சீசன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன்-சச்சின்’ டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் துவங்கியது.
‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், ராகுல் வலுவான ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்த போது, கார்ஸ் பந்தில் ராகுல் (42) அவுட்டானார்.
சுதர்சன் ‘டென்ஷன்’ – அறிமுக போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன், ‘டென்ஷனாக’ காணப்பட்டார். 26 வது ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். இதன் 4வது பந்து, நன்றாக ‘சுவிங்’ ஆகி, சுதர்சன் இடது புறமாக சென்றது. அப்போது, சுதர்சன் பேட்டில் பட்ட பந்தை, விக்கெட் கீப்பர் ஸ்மித் ‘கேட்ச்’ செய்ய, அறிமுக வாய்ப்பில் 4 வது பந்தில் ‘டக்’ அவுட்டானார்.
ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் இணைந்தனர். ஒருநாள் போட்டி போல வேகம் காட்டிய சுப்மன், வோக்ஸ் ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். ஜெய்ஸ்வால் தன் பங்கிற்கு வோக்ஸ் ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். ஜோஷ் டங்க் பந்தில், இப்போட்டியின் முதல் சிக்சர் விளாசினார்.
ஜெய்ஸ்வால் சதம் – சுப்மன், 56 பந்தில் அரைசதம் கடந்தார். ஜெய்ஸ்வால், டெஸ்ட் அரங்கில் 5வது சதம் அடித்தார். 3வது விக்கெட்டுக்கு 129 ரன் சேர்ந்த நிலையில், ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார் ஜெய்ஸ்வால் (101). டங்க் பந்தில் பவுண்டரி அடித்த சுப்மன், சதம் கடந்தார். இவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த ரிஷாப் பன்ட், தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 359 ரன் எடுத்திருந்தது. சுப்மன் (127), ரிஷாப் பன்ட் (65) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் பேட்டர்கள் ரன் குவிப்பை தொடர்ந்தால், இந்தியா இமாலய ஸ்கோரை எட்டலாம்.
கவாஸ்கருக்கு பின் – கேப்டனாக அறிமுகமான முதல் டெஸ்ட் இன்னிங்சில் சதம் விளாசிய 4வது இந்திய வீரரானார் சுப்மன் கில். இதற்கு முன் விஜய் ஹசாரே, கவாஸ்கர், கோலி இப்படி சாதித்தனர்.
ஐந்தாவது இந்தியர் – இங்கிலாந்து மண்ணில் களமிறங்கிய அறிமுக டெஸ்ட் இன்னிங்சில் சதம் விளாசிய 5வது இந்திய வீரரானார் ஜெய்ஸ்வால். இதற்கு முன் விஜய் மஞ்ச்ரேக்கர் (1952, 133 ரன், லீட்ஸ்), சந்தீப் பாட்டீல் (1982, 129* ரன், மான்செஸ்டர்), சவுரவ் கங்குலி (1996, 131 ரன், லார்ட்ஸ்), முரளி விஜய் (2014, 146 ரன், நாட்டிங்காம்) இப்படி சாதித்திருந்தனர்.
* கடந்த ஆண்டு பெர்த்தில் அசத்திய (161 ரன்) ஜெய்ஸ்வால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் களமிறங்கிய முதல் டெஸ்டில் சதம் விளாசிய முதல் அன்னிய வீரரானார்.
* ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் சதம் விளாசிய 3வது இளம் இந்திய வீரரானார் ஜெய்ஸ்வால் (23 வயது). இதற்கு முன் சச்சின் (19 வயது), ரிஷாப் பன்ட் (21 வயது) இப்படி சாதித்திருந்தனர்.
* லீட்சில் சதம் விளாசிய முதல் இந்திய துவக்க வீரரானார் ஜெய்ஸ்வால்.
29வது வீரர் – அறிமுக டெஸ்டில் ‘டக்-அவுட்’ ஆன 29வது இந்திய வீரரானார் சாய் சுதர்சன். இதற்கு முன் இரானி (1947), சந்திரசேகர் (1964), குண்டப்பா விஸ்வநாத் (1969), மனிந்தர் சிங் (1982), ராபின் சிங் (1999), பார்த்திவ் படேல் (2002), விரிதிமன் சகா (2010), அஷ்வின் (2011), உமேஷ் யாதவ் (2011) உள்ளிட்டோர் தங்களது முதல் டெஸ்டில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர்.
3006 நாட்களுக்கு பின் – இந்திய ‘லெவன்’ அணியில் கருண் நாயர் இடம் பிடித்தார். இவர், 3006 நாட்களுக்கு பின், டெஸ்ட் அணிக்கு திரும்பினார். கடைசியாக 2017ல் (மார்ச் 25-28), தர்மசாலாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார்.
9வது கேப்டன் – டெஸ்ட் அரங்கில் கேப்டனாக அறிமுகமான முதல் இன்னிங்சில் 50 அல்லது அதற்கு மேல் ரன் விளாசிய 9வது இந்தியரானார் சுப்மன் கில். தவிர இச்சாதனை படைத்த இளம் இந்திய கேப்டன் (25 ஆண்டு, 258 நாள்) ஆனார்.
* தவிர இவர், டெஸ்டில் தனது அதிவேக அரைசதத்தை (56 பந்து) பதிவு செய்தார்.
317வது வீரர் – நேற்று, தமிழக வீரர் சாய் சுதர்சன் 23, டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார். டெஸ்டில் அறிமுகமான 317வது இந்திய வீரரான இவருக்கு, முன்னாள் ‘ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்’ புஜாரா, டெஸ்ட் போட்டிக்கான பிரத்யேக தொப்பி வழங்கினார்.
கோலி வழியில் – டெஸ்ட் வரலாற்றில் ஜூன் 20ல் அறிமுகமான இந்திய வீரர்கள் வரிசையில் கங்குலி (1996, ஜூன் 20-24, எதிர்: இங்கிலாந்து, இடம்: லார்ட்ஸ்), டிராவிட் (1996, ஜூன் 20-24, எதிர்: இங்கிலாந்து, இடம்: லார்ட்ஸ்), கோலியுடன் (2011, ஜூன் 20-23, எதிர்: வெஸ்ட் இண்டீஸ், இடம்: கிங்ஸ்டன்) இணைந்தார். இவர்களை போல, சுதர்சனும் டெஸ்ட் அரங்கில் சாதிக்கலாம்.