மாஸ்கோ –

உக்ரைன் மீது நீண்ட நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர நடந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் உள்ளன.
ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா உள்ளிட்ட சில நாடுகள் செயல்படுகின்றன. இந்த போரில் இரு நாடுகளிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியா செயல்படுகிறது. அந்நாட்டை சேர்ந்த வீரர்கள் ரஷ்யா உடன் இணைந்து போரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை கட்டமைக்கும் பணியில் அந்நாட்டிற்கு உதவ ஆயிரம் ராணுவ பொறியாளர்கள் மற்றும் 5 ஆயிரம் ராணுவ ஊழியர்களை அனுப்பி வைக்க வட கொரியா முடிவு செய்துள்ளது.
இதனை ரஷ்யா அரசு உறுதி செய்துள்ளது. அவர்கள் உக்ரைன் ராணுவத்தால் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை கட்டமைப்பார்கள் எனவும், உக்ரைன் தாக்குதலில் உயிரிழந்த வட கொரியா வீரர்களுக்கு ஆதரவாக நினைவுச் சின்னம் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.