செம்மணி –
செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் வியாழக்கிழமை (26.06.2025) மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய வியாழக்கிழமை (26.06.2025) இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் இடம் பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புதை குழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் 45 நாட்களுக்கு இரண்டாம் கட்ட அகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி அகழ்வுகளுக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றும் என்ற உத்தரவிற்கு அமைய வியாழக்கிழமை (26) இரண்டாம் கட்ட அகழ்வுகளை முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினத்துடன் இதுவரை 22 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 45 நாட்களுக்கு பாதீட்டு அளவு உள்ளதால் முதல் 15 நாட்களுக்கு அகழ்வு பணிகள் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.