பெங்களூரு –
இது தொடர்பாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின் மாதேஸ்வரன் மலையில் மீன்யம் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு தாய்ப்புலியும், 4 குட்டிப்புலிகளும் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்து கிடந்தன. வனத்துறை ஊழியர்கள், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, புலிகள் இறந்து கிடந்ததை கண்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், புலிகளின் உடல்களை பார்வையிட்டனர். சுற்றுப்புற கிராமங்களில் யாராவது, இறைச்சியில் விஷம் கலந்து, புலிகளை கொன்றிருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகித்தனர். புலிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். புலிகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது தாய்ப்புலி மற்றும் 4 புலி குட்டிகளின் மரணம் பழிவாங்கும் செயலாகும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. புலியால் பசு கொல்லப்பட்ட பிறகு, பழிவாங்க ஒரு கிராமவாசி 4 புலிகளுக்கு விஷம் கொடுத்தது தெரியவந்தது. புலி கொன்ற பசுவின் உரிமையாளரின் மகன் பழிவாங்கத் திட்டமிட்டான்.
புலி மற்றும் அதன் குட்டிகள் பசுவின் சடலத்தை உண்ணும் என்பதை நன்கு அறிந்துள்ளான். இதன் பிறகு, அவர் பசுவின் சடலத்தில் பூச்சிக்கொல்லியைப் பூசினார். இதனை உட்கொண்ட, தாய்ப்புலி மற்றும் 4 புலி குட்டிகள் உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புலிகள் எண்ணிக்கையில், இந்தியாவிலேயே கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது. புலிகள் பாதுகாப்பில் பிரசித்தி பெற்ற மாநிலத்தில், 5 புலிகள் இறந்தது, வன விலங்குகள் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இது குறித்து, கர்நாடகா முதல்வர் சித்தராமையா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் தாய்ப்புலி மற்றும் 4 குட்டி புலிகள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மனதிற்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
இது குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாப்பது நமது பொறுப்பு, சொந்தங்களின் மீது காட்டும் அன்பை வனவிலங்குகள் மீது காட்ட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.