தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 ஜூலை 5ம் நாள் பேரினவாத சிங்கள ராணுவத்திற்கு எதிராக, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த ராணுவ முகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடாத்தி கரும்புலி கப்டன் மில்லர் வீரகாவியமான நாளே கரும்புலிகள் நாளாகும்.

” Black Tigers ” என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே ,தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர்.
இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகளைக் கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்க மரபினைக் காப்பதற்கு,வீரச்சாவினைத் தழுவியோர் எத்தனையோ பேர்.அதில் தெய்வப் பிறவிகள்தான் கரும்புலிகள்.
கரும்புலிப்படையணியைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கரும்புலி கப்டன் மில்லரால் புதிய வரலாறு ஒன்று எழுதப்பட்டது என்பது நிதர்சனமானது.
தமிழீழத்தின் வடமராட்சிப் பகுதிகளை வன்வளைப்புச்செய்து முன்னேறிவந்து நெல்லியடி மத்திய மகாவித்தியாலத்தில் தளம் அமைத்து ,அடுத்த கட்ட நகர்விற்கான தயார்ப்படுத்தலில் சிங்கள இராணுவம் ஈடுபட்டிருந்தது.சிங்களத்தின் கனவினைச் சிதைத்து, சிங்கர அரசே ஆட்டங்காண வைத்த,கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் தாக்குதலானது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தடை உடைப்பாக அமைந்தது. நெல்லியடித் தாக்குதலின் பின்னர் எத்தனையோ தற்கொடைத் தாக்குதல்களைத் தமிழீழத்தின் புதல்வர்கள் தமிழீழ மக்களின் தாயக விடுதலைக்காக நிகழ்த்தியுள்ளார்கள். காலங்காலமாக எதிரியின் குகைக்குள்ளேயே உலவி, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவாமல் தமது கடமையை செய்த அற்புத மனிதர்கள் இந்தக் கரும்புலிகள்.
எத்தனையோ கரும்புலிகள் தம்முடைய பெயர்,முகம் வெளித்தெரியாமலே தம்மை வரலாற்றில் விட்டுச் சென்றுள்ளார்கள்.
“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்” என்று தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனால் விழிக்கப்படுகின்றமையின் அர்த்தத்தின் ஆழம் பற்றி நாம் உணர்வோம். எனவேதான் இன்றும் தமிழினத்தின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம். இன்று தமிழீழ தேசமெங்கும் தனது கால்களை அகலப்பதித்திருக்கும் பேரினவாத சிங்களத்தின் கொடிய கரங்களினால் எமது மக்கள் படும் துன்பங்களை எல்லாம் எமது கொள்கையில் மேலும் உரம் கொள்ள வைக்கும் செயற்பாடாகும்.
. அன்றைய சிறிலங்காவின் சனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தன இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்தை கொழும்பில் திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப் போர் ஓயாது என்று ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கையை சிங்கள மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார்.
வடமராட்சியில் இந்த ஒபரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிறிலங்கா இராணுவம் மகிழ்ந்து கொண்டாடிக்கொண்டிருந்தது. இதன் ஒரு கட்டமாக நெல்லியடி மகா வித்தியாலயத்தில் ஏராளமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். அதோடு வடமராட்சி பிரதேச மக்கள் இந்த படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளாக வெளியேறியிருந்தனர். தென்னிலங்கையில், புலிகள் ஒழிந்தார்கள் என்ற பெரும் வெற்றி முழக்கம் வானளாவக் கேட்டது.
இச்சூழமைவில்,இந்த வெற்றிக்குக் காரணமாக இருக்கும் நெல்லியடி படைத்தளத்தை அழித்து நிர்மூலமாக்கவேண்டும் என்ற எண்ணம் விடுதலைப் புலிகள் மத்தியில் எழுகின்றது. இதற்கென குறைவான இழப்போடு,ஒரே நேரத்தில் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தவல்ல கரும்புலித் தாக்குதல் ஒன்றின் தேவை உணரப்பட்டு ,விடுதலைப் புலிகளின் தலைமையால் அது திட்டமிடப்படுகிறது.இந்த தாக்குதலுக்கென அனைத்து திட்டங்களும் தயார்படுத்தப்பட்டன. தாக்குதலை மேற்கொள்ளவென இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராயிருந்த வல்லிபுரம் வசந்தன் எனும் கப்டன் மில்லர் முன்வருகின்றார்.அந்நேரத்தில் மில்லர் தாக்குதலுக்கென இயக்கத்தின் தலைமையால் தேர்வு செய்யப்பட்டார்.
1987 ஜூலை 5ஆம் திகதி மாலை வேளையில், மிகுதியான வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட பாரவூர்தியில் ஏறிக்கொண்ட மில்லர், நெல்லியடி மகா வித்தியாலயத்தை நோக்கி நகர்கின்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அனைவரும் காத்திருக்கையில் ,சரியாக இரவு 7மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி மிகப்பெரிய சத்தத்தோடு வெடித்தது.இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் படுகாயமடைந்துமிருந்தனர். இந்த வெற்றிகரத்தாக்குலினால் சிங்கள அரசு ஆட்டங்கண்டது.இத்தாக்குதலினை மேற்கொண்டு, கரும்புலி கப்டன் மில்லர் வரலாற்றுபடைத்து,காற்றோடு கரைந்தார்.
அதுவரையான விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அத்தோடு, கரும்புலிகள் தசாப்தம் ஆரம்பமாகி ,கடலிலும் தரையிலும் வானிலும் தமக்கு ஏற்படும் மிகப்பெரிய தடைகளை உடைக்கவேண்டிய தேவை புலிகளிடம் தொடர்ச்சியாக எழுந்தது.இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் நிகழ்ந்ததே கடல் ,வழியான கரும்புலித் தாக்குதல். அதனை நடத்தி முடித்த முதலாவது கடல் கரும்புலி தாக்குதல் கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி அவர்களால் திகழ்த்தப்பட்டது.
கரும்புலிகள் நாளானது வருடந்தோறும் ஜூலை மாதம் 5ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.இது விடுதலைப் புலிகளின் முக்கியமான நினைவேந்தல் நாட்களிலேயே மாவீரர் நாளுக்கு அடுத்தாக நினைவேந்தப்படும் பெரும் எழுச்சி நாளாகும்.
கரும்புலித் தாக்குதலுக்கு வலுச்சேர்க்கும் அடுத்த கட்ட வரலாற்றைப் பதியம்செய்யும் தாக்குதளாளியாகவும் முதலாவது மகளிர் கரும்புலியாகவும் கப்டன் அங்கையற்கண்ணி விளங்கினார்.
விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியில் ஒருவராக யாழ்ப்பாணம் வேலணைத்தீவைச் சேர்ந்த துரைசிங்கம் புஸ்பகலா எனும் அங்கயற்கண்ணி தன்னை இணைத்துக்கொண்டார்.
கடற்படையினருக்கு மிகப்பெரிய அழிவைக் கொடுக்கவல்ல பாரிய தாக்குதல் ஒன்றைத் தானும் மேற்கொள்ள வேண்டும் என்று வாஞ்சை கொண்டார்.தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதை தமிழீழ புலிகளின் தலைமைக்குத் தெரியப்படுத்தினார். தலைமையிடம் ஒப்புதல் பெற்று தாக்குதலுக்கான திட்டம் வகுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நிலைகொண்டிருந்த ,வடபகுதி கடற்பரப்புக்கான கட்டளைக் கப்பல் அங்கயற்கண்ணியின் தாக்குதல் இலக்கானது. அதனை சுமார் எட்டு மணித்தியாலமாக நீந்திச் சென்று தாக்கியழிக்கும் கடுமையான பணி.
சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டார். அவரது பொறுப்பாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிய நாளிலிருந்து அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அங்கயற்கண்ணியால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.அதே நேரம் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே எதுவுமே செய்யமுடியாது என்பதில் சிறிலங்காவின் எந்தவொரு கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை. உண்மையும் அதுதான், ஏனெனில் அதற்கு பல அடுக்கு கடல் பாதுகாப்பைக் கொடுத்திருந்தனர்.”இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்” என்று சொல்லி விட்டுச் சென்ற அங்கயற்கண்ணி 16.08.1994 அதிகாலை 12.35 மணியளவில், அந்தக் கப்பல்மீது மோதி வெடித்தார். யாழ்ப்பாணக் குடா நாட்டையே அந்த மிகப்பெரிய அதிர்வுடனான வெடிப்புச் சத்தம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றுதான் சொல்லமுடியும்.
இதன் பின்னர் கரும்புலிகளின் வளர்ச்சி வேகமானதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு மிகப்பெரும் பலமிக்க படையணியாக உருவெடுத்தனர்.தரைக் கரும்புலி, கடற்கரும்புலி, மறைமுக கரும்புலி, வான் கரும்புலி என கரும்புலிகளின் பங்களிப்பு, புலிகளின் அத்தனை மரபுவழி படையணிகளிலும் செல்வாக்குச் செலுத்தியிருந்தது.ஈழப்போரின் சகல படை நடவடிக்கைகளிலும் புலிகளின் நகர்ந்து செல்லும் படையணிகளுக்கு கரும்புலிகளின் தாக்குதல்கள் பக்கபலமாக இருந்ததோடு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க தாக்குதல்கள் சிங்கள இனவெறி அரசாங்கத்தின் பொருளாதாரச் சமனிலையை ஆட்டங்காணவைத்தது.
கரும்புலிகள் சிறப்புக் கமாண்டோக்களாகி நன்கு திட்டமிட்டு நிகழ்த்திய தாக்குதல்களில் 2000ஆம் ஆண்டு சிறிலங்காவின் கட்டு நாயக்கா விமானப் படைத்தளம் மீதான தாக்குதலும், 2007ஆம் ஆண்டு அனுராதபுரம் விமானத்தளம் மீதான தாக்குதலும் குறிப்பிடத்தக்கவையாகும். சிறிலங்கா பாதுகாப்புத்துறைக்கு பலகோடிக்கணக்கான இழப்புக்களைத் தேடிக்கொடுத்த தாக்குதல்களாக இவை வரலாற்றில் பதிவாகின.
இன்று மட்டுமல்ல என்றும் அனைவரது நெஞ்சங்களிலும் இந்த நெருப்பு மனிதர்கள் நிலைத்து வாழ்வார்கள்.இவர்களது ஈகங்கள் தமிழினத்தின் விடுதலைக்கு தடைஉடைத்து ,வழிகாட்டி நிற்கும் என்பது திண்ணம்.
அவர்களின் இலட்சிய தாகத்தை சுமந்து விடுதலைத்தேரின் வடம் பிடித்து பயணிப்போம்.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”