
அண்மைக் காலமாக புலம்பெயர் நாடுகளில் வளர்ந்துவரும் எம் இளைய தலைமுறைப் பிள்ளைகள் பல்வேறு துறைகளில் தமது ஆளுமைகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்தி வருவதை அதிகமாக காண முடிகிறது.
ராபர்ட் திரு | பிரான்ஸ் –
இதில் சிறப்பும், மகிழ்வும் என்னவென்றால் ‘தமிழீழம்’ எனும் தாயக பற்றோடு தங்களை மிக வெளிப்படையாக அவர்கள் அடையாளப் படுத்திவருவது.

‘ஆதர்ஷா குமார்’ – எமது அன்புக்குரிய ஊடவியலாளர்களான குமாரதாசன் கார்த்திகேசு (தாஸ் நியுஸ்), வாசுகி குமாரதாசன் ஆகியோரின் மகள். நிழற்படக் கலைமீது கொண்டிருந்த தீராக் கனவால் உந்தப்பட்டு, பிரான்ஸ் தேசத்தின் பிரபல கலைக்கூடத்தில் ‘போட்டோகிரஃபி’ கலையை முறையாக கற்றுத் தேர்ந்து, தனது முதலாவது நிழற்படக் கண்காட்சியை நிகழ்தியிருக்கிறார்.
“இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே நான் பயணிக்கிறேன், பாரிஸ் மண்ணில் வாழ்ந்தாலும், என் குழந்தைப்பருவ நினைவுகள் நாளாந்தம் என்னைத் தொட்டுச் செல்கின்றன. அது என் வேர்களைத் தேடி அதன் பாரம்பரியங்களை மீண்டும் உயிர்ப்பிக்கின்றன” என்று குறிப்பிடும் ஆதர்ஷா குமார், மனிதர்களின் வாழ்வியல் அதன் பண்பாடுகளினூடே எமது தொன்மையை தேடுவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.
பல்லின வேற்று நாட்டவர்களுடன் இணைந்து ஓர் ஈழத் தமிழ் மகளாக, தனது துறைசார் கற்கையின் உயர் வெளிப்பாடாகவும், தன் முதற் காட்சிப்படுத்தலாகவும் ‘சடங்குகள்’ எனும் தொனிப் பொருளில் நிழற்படங்களைக் காட்சிப் படுத்தியிருந்தார். மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்ட இக் கண்காட்சியில், சடங்குகளின் உள்ளார்ந்த குறியீடுகளையும், குறியீடுகளின் வாயிலாக எம் தொன்மத்தையும் உயிர்ப்பிக்க முனைகிறார் ஆதர்ஷா குமார்.
தான் நேசிக்கும் கலையை ஆழமான புரிதலுடனும், எமது தமிழ்ப் பண்பாட்டுடனும் இணைத்து இவர் வழங்கும் படைப்புகள் மென்மேலும் தொடரவேண்டும். உலகின் அத்தனை துறைகளிலும் எம்மவர்கள் மிளிர வேண்டும்.
வாழ்த்துகள் ஆதர்ஷா..!
@atharsha_k | www.atharshakumar.com | atharsha.k.photo@gmail.com
ராபர்ட் திரு | பிரான்ஸ்











