பரணி கிருஸ்ண ரஜனி –

“புலிகள் ஆட்சேர்ப்பிற்கு மக்களைத் தயார்படுத்தவில்லை. ஆட்சேர்ப்பு என்பது நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான், அதை படிப்படியாக மக்களுக்கு புரிய வைத்து தயார்படுத்த வேண்டும். ஆனால் புலிகள் வெற்றி மிதப்பில் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் காட்டுமிராண்டிகள் போல் நடந்து கொண்டார்கள்.” இது ஆட்சேர்ப்பை ஏற்றுக் கொண்டது போல் நாடகமாடும் ‘நட்ட’ நடுநிலை வாதிகளின் வாதம்.
இது வெளிப்பார்வைக்கு ஏதோ சரியானது போல் தோன்றும். ஆனால் மோசமான வரலாற்று திரிபும், புலிகளை நுட்பமாக குற்றவாளிகளாக்கும் போக்கும் இது.
ஆட் சேர்ப்பு என்ற சொல்லாடலே முதலில் கருத்தியல் ரீதியாகப் பிழை. ஒரு தேசத்தின் ‘ஆளணிப் பெருக்கம்’ என்பதே சரியானதாகும்.
புரிதலுக்காக ஆட்சேர்ப்பு என்ற பதத்தையே இங்கு பயன்படுத்துகிறேன்.
ஆட்சேர்ப்பு என்பதை மிகப் பெரிய மனிதப் பேரவலமாக மாற்ற வெளியக – உள்ளக சக்திகள் சேர்ந்து நுட்பமாக காய்களை நகர்த்தின. தொடர் நில இழப்பும், படைத்துறை பின்னடைவும் புலிகளுக்கு இதை சரி செய்யும் சூழலை வழங்கவில்லை.
ஆனால் மேற்படி குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்.
புலிகள் படிப்படியாக ஆளணி பெருக்கத்திற்கு மக்களை தயார் செய்ததே உண்மை.
01. சமாதான காலத்தில் அனைத்து மக்களுக்கும் ஆயுத பயிற்சி வழங்கியது என்ன வகை?
02. தமது படையணி தவிர்ந்து மக்கள் தொகுதிக்குள்ளிருந்து எல்லைக்காவல் படை, துணை படை உருவாக்கம் செய்தது என்ன வகை?
இவற்றையும் விடுவோம்.
இந்திய படைகளை வெளியேற்றியவுடன் நடைமுறை அரசை உருவாக்கிய புலிகள் தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் கொண்டு வந்த ஒரு விடயம்.
‘பாஸ்’ நடைமுறை.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாயகத்தை விட்டு வெளியேற இறுக்கமான சட்டத்தை கொண்டு வந்தார்கள்.
பின்பு படிப்படியாக அதைத் தளர்த்தி விரும்பினால் ஒரு குடும்பத்தில் ஒருத்தரை விட்டு விட்டு ஏனைய அனைவரும் வெளியேறலாம் என்று மாற்றினர்.
அந்த ஒருத்தர் என்ன புலிகளுடன் பல்லாங்குழி விளையாடவா வைத்திருந்தார்கள்.?
தேவைப்பட்டால் நாட்டிற்காக ஆட்சேர்ப்புக்குட்படுத்தப்படுவார் என்பதுதான் அதன் மறுவளமான உண்மை.
இதெல்லாம் தெரியாமல் கண்டதையும் ‘நடுநிலை’ ஆய்வு என்ற பெயரில் வாந்தியெடுக்கிறது.
“புலிகளை குற்றவாளிகளாக்குகிறோம்” என்று தங்களைத் தாங்களே அம்பலப்படுத்துவதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
மக்களுக்கு இது குறித்து எந்தப் புகாரும் இல்லை. அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.
நவம்பர் 27 மாவீரர் துயிலுமில்லங்களில் நிரம்பி வழியும் மக்களே இதற்கான சாட்சியம்.