அடிஸ் அபாபா –
ஆப்ரிக்காவில் உற்பத்தியாகும் நைல் நதிக்கு இரண்டு கிளைகள் உள்ளன.

வெள்ளை நைல் நதி மத்திய ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் உற்பத்தி ஆகிறது. நீல நைல் நதி கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் உற்பத்தி ஆகிறது.
இவை இரண்டும் சூடானின் கர்த்தோம் பகுதியில் இணைந்து வடக்கே எகிப்து வழியாக கடலில் கலக்கின்றன.
இந்த நதியின் மொத்த நீளம் 6,650 கி.மீ., இந்த நதியின் குறுக்கே எத்தியோப்பியா அரசு, மறுமலர்ச்சி அணை என்ற பெயரில் மின் உற்பத்திக்கான அணை திட்டத்தை, 2011ல் துவக்கியது.
இதற்கு, எகிப்து மற்றும் சூடான் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த அணையின் நீராதாரத்தை நம்பியே எகிப்தின் 10 கோடி மக்களும், விவசாயிகளும் உள்ளனர். எத்தியோப்பியாவின் அணை திட்டம் நீர் பங்கீடை பாதிக்கும் என, எகிப்து மற்றும் சூடான் குற்றம்சாட்டின.
இது தொடர்பாக நடந்த பேச்சுகள் அனைத்தும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தன. ஒரு கட்டத்தில், இந்த நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயமும் ஏற்பட்டது. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு பின் இந்த அணை திட்டம் முழுமை அடைந்துள்ளது.
வரும் செப்டம்பரில் இந்த அணை முறைப்படி திறந்து வைக்கப்படும் என, எத்தியோப்பிய பிரதமர் அபை அஹமது அலி, அந்த நாட்டின் பார்லிமென்டில் நேற்று அறிவித்தார்.
மேலும், எகிப்து மற்றும் சூடானுக்கு உரிய நீர் பங்கீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
சூடான் எல்லையை ஒட்டியுள்ள இந்த அணை, ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாக அமைந்துள்ளது. இதன் வாயிலாக, 6,000 மெகாவாட் மின்சாரத்தை எத்தியோப்பியா தயாரிக்க முடியும்.
இது அந்த நாட்டின் தற்போதைய மொத்த மின்சார உற்பத்தியைவிட, இரண்டு மடங்காகும். மேலும், இந்த திட்டம் அமலுக்கு வரும்போது, எத்தியோப்பியாவால் மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய முடியும்.
இந்த அணை, 5,400 அடி நீளமும், 525 அடி உயரமும் கொண்டது. மேலும், 7,400 கோடி கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.