| செம்மணி
செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏனென்றால் சிறுவர்களை எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது. எனவே இது நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே இந்த மனித புதைகுழி காணப்படுகின்றது என சட்டத்தரணி கேஎஸ் ரத்னவேல் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாள் அகழ்வின் முடிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
இன்றைய தினம் 12வது நாளாகவும் அகழ்வு நடைபெற்றது, நிபுணர் ராஜ்சோமதேவாவும் அவரது குழுவினரும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் தொல்லியல் துறையை சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து அகழ்வாராச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
அத்துடன் புதியதொரு இடத்தையும் கண்டுபிடித்து அகழ்வாராச்சி இடமபெறுகின்றது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் மீட்கப்பட்டுள்ள கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் யாவுமே ஒரு குறைந்தளவு – அதாவது ஒன்றரையடிக்குள்ளான ஒரு இடத்தில் புதைத்திருக்கின்றார்கள்.
இது சாதாரணமாக உடல்கள் புதைக்கப்பட்ட இடமாக தெரியவில்லை,மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாக தெரியவில்லை அதற்கு மாறாக ஏனோதானோ என்று அவசர அவசரமாக சடுதியாக செய்யப்பட்ட விடயமாக தெரிகின்றது.
சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏனென்றால் சிறுவர்களை எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது. எனவே இது நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே இந்த மனித புதைகுழி காணப்படுகின்றது .
இந்த விடயத்தில் ஆய்வாளர்கள் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகின்றனர்.