-மதுரை–
‘ஈ.வெ.ரா.,வை கொள்கை வழிகாட்டியாக விஜய் ஏற்கிறார். எங்களது கொள்கை வேறு, வழி வேறு. அதனால் அவருடன் இணைந்து வேலை செய்வது ரொம்ப கடினம்’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது:
எங்களுக்கு யாருமே போட்டி இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். இதற்கு முன்னர் பெரிய, பெரிய கட்சிகள் கூட்டணி வைக்கும் போதும், தினகரன் வரும்போதும், கமலஹாசன் வரும்போதும், இவர்கள் எல்லாம் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும்போதும் நான் கலங்காமல் களத்தில் நின்று முன்னேறி தான் போய்க் கொண்டிருக்கிறேன். அதனால் நாங்கள் எடுத்து வைக்கும் அரசியலுக்கும் அவர்களுக்கும் இடையே நிறைய தூரம் இருக்கிறது. அதனால் எனக்கு இவர்கள் யாரும் போட்டி கிடையாது.
இந்த நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நேசிக்கிற நினைக்கிற, ஒரு மாற்று அரசியல் வேண்டும், நல்லாட்சி மலர வேண்டும் என்று நினைக்கிற மக்கள் எங்களுடன் தான் இருப்பார்கள். அதனால் நாங்கள் யாருடனும் சமரசம் செய்து, அணி சேர்ந்து தேர்தல் வெற்றியை அனுபவிக்க முடியாது.
எங்களுக்கு இந்த நாடும், அதிகாரமும் தேவைப்படுகிறது. எங்களது கனவு பெரியது. அதனை தனித்து நின்று, வென்று தான் நாங்கள் செய்ய முடியும். நான் ஓட்டிற்கு காசு கொடுப்பானா, இல்லையென்றால் கூட்டம் சேர்ப்பதற்கு காசு கொடுத்து அழைத்து வருவேனா, அது எல்லாம் கிடையாது. எங்களது வேட்பாளர்களை எல்லாம் களத்தில் இறக்கி வேலை நடந்து வருகிறது.
த.வெ.க., கொடியில், நான் 15 வருடமாக வைத்திருந்த கொடியை சிவப்பு மஞ்சள் போட்டு வைத்துக் கொண்டார்கள். தம்பி என்னை பின்பற்றி பின்னால் வருவது பெருமையும், மகிழ்ச்சியும் தான்.
பரந்தூர் பிரச்னையை முதல் முறையாக வெளியே எடுத்து வந்து சண்டை போட்டது நான்தான். இப்போது தம்பி (விஜய்) அதனை பேசுகிறார் என்றால் எனது கருத்துக்கு கூடுதலாக வலிமை சேர்க்கிறார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை போட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அது எனக்கு மகிழ்ச்சி தான்.
இவர்கள் எல்லாம் ஈ. வெ. ரா இல்லை என்றால் அரசியல் இல்லை என்று சொல்கிறார்கள். எங்களுக்கு ஈ.வெ.ரா.,வால் ஒன்றும் இல்லை. ஈ.வெ.ரா., எங்களுக்கு அரசியலுக்கான குறியீடு ஏதும் கிடையாது. தம்பி முதற்கொண்டு ஈ.வெ.ரா.,வை கொள்கை வழிகாட்டியாக ஏற்கிறார். எங்களது கொள்கை வேறு, வழி வேறு.
அதனால் அவருடன் இணைந்து வேலை செய்வது ரொம்ப கடினம். அவர் (விஜய்) மொழி, இனம் என்று பேச மாட்டார். அதனை பிரிவினைவாதம் என்கிறார். எங்களது கோட்பாடு, உலகம் முழுவதும் மொழி, இனம் வழியில் தான் அரசியல் நடக்கிறது. இந்தியாவை இத்தனை மாநிலமாக பிரித்தது மொழிதான். மொழி வழியாக தான் தேசத்தின் வளங்கள், நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அதனை தம்பி ( விஜய்) பேச வரவில்லை. இவ்வாறு சீமான் கூறினார்.