–சென்னை–
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீசார் விசாரணையின் போது மரணமடைந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித்குமார், 30; பேராசிரியை நிகிதாவின் நகை மாயம் குறித்த புகாரில் தனிப்படை போலீசாரால் விசாரிக்கப்பட்ட போது இறந்தார். கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, போலீசார் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தனிப்படை வாகன டிரைவர் ராமச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் பிஎன்எஸ்., சட்டப்பிரிவு 103 ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த சட்டத்தின்படி, கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.