எமது புகழ் வணக்கம்

1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகிய பொழுது “புலிகளின்குரல் செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் இவர்.
இவர் புலிகளின்குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் செயற்பட்டிருந்தார்.
தனித்துவமான செய்தி வாசிப்புப் பாணியை கொண்ட புலிக் குரலோனான இவர் நிதர்சனம் நிறுவனத்தில் மாதாந்தம் வெளியாகிய ஒளிவீச்சு காணொளிச் சஞ்சிகையில் தொடர்ந்து மாதாந்தம் இடம்பெற்ற “சமகாலப் பார்வை” என்ற நிகழ்ச்சிக்கான குரல் வழங்குபவராகவும் செயற்பட்டார்.
நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நேர்காணலுடன் ஒளிபரப்பாகிய “விடுதலைத் தீப்பொறி” என்கின்ற நிகழ்ச்சியின் குரல் வழங்குநராக செயற்பட்டவரும் இவரே!
தேசியத் தலைவர் அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை ஒட்டி நிதர்சனம் நிறுவனம் தயாரித்த “தலை நிமிர்வு 50” என்ற ஆவணப்படம் உட்பட ஏராளமான ஆவண வெளியீடுகளின் முதன்மைக் குரல் தொகுப்பாளராக பணியாறியவர் சத்தியா.
இடப்பெயர்வுக்கு முன்னர், நிதர்சனம் நிறுவனத்தினரை யாழ்ப்பாணத்தில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் பின்னர் முள்ளியவளையில் புலிகளின் குரல் வானொலி செயற்பட்ட 1998 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்து மதிப்பளிப்பளிக்கப்பட்டவராவார்.
புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய வரலாற்றுத் தொடரான “காலச்சக்கரம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து மறைந்த கலைஞர் சங்கநாதன் அவர்களுடன் இணைந்து குரல் வழங்கியிருந்தார்.