-ஹம்பாந்தோட்டை-
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக்கூறப்படும் 20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அதிநவீன ரக 21 மோட்டார்சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணலாயத்தின் முகாமையாளர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் குறித்த பறவைகள் சரணாலயத்தின் களஞ்சிய கட்டுப்பாட்டாளருக்கு நீதவான் வெளிநாட்டு பயணத் தடை விதித்தார்.
பதில் பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மத்திய குற்ற விசாரணப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்ச தலைமையிலான பொலிஸ் குழுவொன்று ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகரவெ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தது.
இதற்கமைய நாகரவெ பறவைகள் சரணாலய வளாகத்தின் உணவு களஞ்சியசாலையில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிநவீன ரக 21 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டிருந்தன.
இவை இறக்குமதிக்கு தடைசெய்யப்பட்டிருந்தாவும் ஒரு மோட்டார்சைக்கிள் ஒன்றின் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் பறவைகள் சரணாலயத்தில் பயிரிடப்பட்டிருந்த 4 கஞ்சா சொடிகளும் மீட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த சரணாலயத்தின் முகாமையாளர் மற்றும் களஞ்சியாலையின் கட்டுப்பாட்டாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.
40 மற்றும் 50 வயதுடைய இருவரே சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மாத்தறை மற்றும் மித்தெணிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இந்த விடயம் தொடர்பில் மத்திய குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.