இதை 2009 யூலை மாதமே எழுதி விட்டோம் என்பதுதான் இதன் முக்கியத்துவம்.

நடந்த இனஅழிப்பையடுத்தும் / ஆயுதப் போராட்டம் உறங்கு நிலைக்குச் சென்றதையடுத்தும் 2009 யூலை மாதம் நாங்கள் தலைவர் பிரபாகரன் குறித்து ஒரு தத்துவ உளவியல் ஆய்வை செய்தோம்.
( Velupillai Prabhakaran : Being and Nothingness – May 18 Before and After )
அதன் முடிவை நாம் பின்வருமாறு கண்டடைந்தோம்.
இந்த இனத்தின் ஒரே தலைவர் பிரபாகரன்தான். 2009 முடிவு இதை எந்த விதத்திலும் பாதிக்காது. தேசியத்தலைவர் பிரபாகரனின் இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது. இனி வரும் ஈழத்தமிழர்களின் காலம் என்பது பிரபாகரன் என்ற பெயரோடு இரண்டறக்கலந்ததாகவே இருக்கும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு பின்னரும் கூட தமிழர்களின் சுதந்திரம், விடுதலை, இறைமை என்பதை தீர்மானிக்கும் ஒற்றைச் சொல் பிரபாகரன் என்பதாகவே இருக்கும்
ஏனெனில் ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. அது ஒரு தொடர் கூட்டு உளவியல் தொடர்பானது. அது ஒரு இனத்தை காலத்திற்கு காலம் இயக்கக்கூடியது மட்டுமல்ல என்றென்றைக்கும் சேர்ந்து பயணிக்கக்கூடியதும் கூட.
முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெரும் பிம்பமாகப் தலைவர் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தமிழனது உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது.
தேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஓர் இனம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
“பிரபாகரனியம்” (PIRABHAKARANIYAM) என்ற நவீன விடுதலைக் கோட்பாடு ஒன்று அவரிலிருந்து வெளிக்கொணரப்பட்டுள்ளது.
தனி மனித வழிபாடு – தனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை எமது ஆய்வினூடாக துல்லியமான உளவியல் வரைபடமாக வரைந்தோம். பிரபாகரன் – தமிழச்சமூகத்திற்கிடையிலான உளவியல் வரைபடத்தை கிரமமாக உள்வாங்காத – இது குறித்த புரிதலில்லாத எத்தகைய அரசியல் நடவடிக்கைகளும் ஈழவிடுதலையை சாத்தியமாக்காது என்பதுடன் அவை மக்களின் மனநிலையிலிருந்து சிந்தித்துத் தோற்றம் பெற்றவையாகவும் இருக்க முடியாது என்பதே எமது ஆய்வின் மிக முக்கியமான முடிவு.
பிரபாகரன் வெற்றிகளின் உச்சத்தில் தனிப்பெரும் நாயகனாக உள்ளிருந்து மட்டுமல்ல வெளியிலிருந்தும் அவர் புகழ்பாடப்பட்டுக்கொண்டிருந்த ஒரு சூழலிலிருந்து நாம் இந்த கருத்தை முன்மொழியவில்லை. அவர் இல்லாமையை தினமும் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கும், தோல்வியின் அழிவின் குறியீடாக்கி அவர் மீது வசைபாடப்பட்டுக்கொண்டிருக்கும், எதிர்மறையான சொல்லாடல்களாலேயே அவர் பிம்பத்தை நிறுவ முற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு விபரீதமான – அச்சுறுத்தும் ஒரு சூழலிருந்து நாம் மேற்படி கருத்துருவாக்கத்தை முன்வைத்தோம்.
“பிரபாகரன் : இருத்தலும் இல்லாமையும்” என்ற எமது தத்துவ – உளவியல் ஆய்வினூடாக “பிரபாகரன்” என்ற பெயர் தமிழ்ச்சமூகத்திற்குள் ஏற்படுத்தியிருக்கும்; அதிர்வுகளை ஒரு புறமாகவும் அவரது விடுதலைக் கோட்பாடுகளை மறுபுறமாகவும் வைத்து முள்ளிவாய்க்காலிற்கு முன்னும் பின்னுமாக அவரது இருப்பையும் இல்லாமையையும் ஆய்வுக்குட்படுத்தினோம்.
இந்த முடிவு மிக முக்கியமானது. இனிவரும் தமிழர் வரலாற்றில் பிரபாகரன் இல்லாமை என்பதே இல்லை – அவரது இருப்பே அதிமுக்கியமாகிறது. இதைப் புறந்தள்ளும் அரசியல் நடவடிக்கைகள் எதுவும் எமக்கு விடுதலையை பெற்றுத்தராது. மாறாக அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தோற்கடிக்கப்பட்ட இனமாகவே மீதிக்காலத்தை இந்த பூமிப்பந்தில் கழிக்க வேண்டியிருக்கும்.
பிரபாகரனின் இருப்பு என்ற சொல்லாடலை நாம் பிரயோகித்தது நாம் அவரை உயிரோடு கொண்டுவரும் சாகச விளையாட்டு சார்ந்ததல்ல. அவரது கொள்கை தொடர்பானது – இந்த இனத்தின் விடுதலை தொடர்பானது – உளவியல் தொடர்பானது – அடுத்த கட்ட போராட்டத்தை வடிவமைப்பது தொடர்பானது.
எனவே யாரும் குழம்பவோ/ தளம்பவோ தேவையில்லை.
வரலாறு எமக்குத் தலைவர் உருவத்தில் வழிகாட்டியாக நிற்கிறது.
வெல்வோம் – வென்றே தீருவோம்