
17.07.2025
தமிழீழத் தேசியத்தலைவருக்கெதிரான சூழ்ச்சித்திட்டங்களை உடைத்தெறிவோம்!
அன்பிற்குரிய பெல்சியம்வாழ் உறவுகளுக்கு வணக்கம்!
தமிழீழ விடுதலைப்போராட்டமானது .தமிழீழ மக்களையும் மண்ணையும் அடக்குமுறைக்குள் தள்ளி,தமிழீழ மண்ணை ஆக்கிரமித்துச் சிங்கள தேசமாக மாற்றும் திட்டமிட்ட இன அழிப்பிற்கெதிரான எரிமலைவெடிப்பாகும். தமிழினத்தை அடக்கியாளும் விலங்கினை உடைத்துத் தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்க. என்றும் அடிபணியா உறுதிமிக்க வீரத்தோடு, தமிழீழ விடுதலைப்போராட்டத்தினைத் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்,தன்னுடைய சிந்தனை வழிநின்று அதற்கான பாதையினைத் திறந்து,உலகமே வியக்கும் உயர்ந்த அர்ப்பணிப்புகளோடு வீரம்செறிந்த போராட்டத்தை நகர்த்தித் தமிழீழ அரசை நிறுவினார்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வீரியத்தினைத் தடுத்து, தமிழீழத் தேசியத்தலைவரின் இருப்பினைக் கேள்விக்குறியாக்கி, தமிழீழத்தினைச் சிங்கள தேசமாக மாற்றும் நாசகார வேலைத்திட்டங்கள், பல ஆண்டுகளாக பல்வேறு வழிகளிகளில் முன்னெடுக்கப்பட்டு வந்ததும் அவை,தேசியத்தலைவரின் சிந்தனை வழிநின்று தகர்க்கப்பட்டமையும் வரலாற்று உண்மையாகும்.கடந்த சில ஆண்டுகளாக, தமிழீழத் தேசியத்தலைவரின் இருப்பு சார்ந்தும் தேசியத்தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துவது சார்ந்தும் இருமுனைகளில் தமிழினத்தை குழிதோண்டிப் புதைக்க எதிரிகளின் நிகழ்ச்சி நிரலோடு பல குழுக்கள் களமிறங்கியிருந்தனர். அவர்களின்ஏற்பாட்டில் நடைபெறவுள்ள வீரவணக்க நிகழ்விற்காக, உணர்வுமிக்க பலர் மடைமாற்றப்பட்டுள்ளனர்.
தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரும் உலகமுள்ளவரை தமிழினத்தின் ஒப்பற்ற தமிழீழத் தேசியத்தலைவருமாவார். அவரது சிந்தனை வழிநின்று அர்ப்பணிப்போடு, உறுதிதளராமல், கொள்கைவழி நின்று போராடித் தமிழீழத்தை மீட்டெடுப்பதே எமக்காய் தம்முயிர் கொடுத்த பல்லாயிரம் மாவீரர்களுக்கும் படுகொலையான பல இலட்சம் மக்களுக்கும் நாம் செய்யும் வரலாற்றுக் கடமையுமாகும்.
இந்த, வரலாற்றுக்கடமையில் தமிழின உணர்வோடு ஒன்றிணைந்து, தேசியத்தலைவரின் சிந்தனையை எமது வழிவரைபடமாகக் கொண்டு, உறுதிமிக்க விடுதலைப்போராட்டத்தில் மக்கள் அனைவரும் இணைந்திட அழைத்துநிற்கின்றோம்.
இந்தவேளையில், தமிழீழத் தேசியத்தலைவருக்கு வீரவணக்கமென சிறுகுழுக்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும், தேசியத்தலைமையைக் கருவறுக்கும் சூழ்ச்சித்திட்டங்களை எழுச்சிகொண்டு
தமிழீழத் இனங்கண்டு, நாம் அவற்றை உடைத்தெறிந்து, இவ்வாறான நிகழ்வுகளைப் புறக்கணிப்பதோடு, “விழிப்புத்தான் விடுதலைக்கான முதற்படி” என்ற தேசியத்தலைவரின் சிந்தனையை எமதாக்கி,தமிழீழம் என்ற இலக்கை நோக்கி வீறுகொண்டு பயணிக்க ஒன்றிணையுமாறு அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பெல்சியம்.
