
லெப். கேணல் நளாயினி, மேஜர் மங்கை உட்பட 30 பெண் போராளிகள் – கடற்புலிகள் மகளிர் படையணியின் ஆரம்பகர்த்தாக்கள் – புதிய மீன் குஞ்சுகளைத் திரட்டிய காலத்தில் இணைந்தவள் சுடரொளி. “நாங்கள் எல்லாத்துக்கும் முன்னு தாரணமாய்ச் செயற்பட்டால்தான், நாளைக்கு எங்கட பெண்கள் சமூகத் தடைகளை உடைச்சு வெளியே வருவார்கள்” என்று தன்னிடம் பயிற்சி பெறும் புதிய போராளிகளுக்குக் கூறுவாள். அவள் ஒரு சிறந்த ஓட்டி. நீச்சற்பயிற்சி ஆசிரியர். திறமையான பொறிகள் திருத்துனர். மிகத்திறமையான இலக்குத்தவறாத சூட்டாளர்.
இவளது திறமை காரணமாக R.P.G. பயிற்சியையும் பெற்றுக்கொண்டாள். சிலகாலம் Mag இயக்குனராகவும் செயற்பட்டாள். மண்டைதீவு முகாம் தாக்குதல், பருத்தித்துறைக் கடற்சண்டை, தரையிறங்கு கலம் மீதான தாக்குதல், தவளைத் தாக்குதல், யாழ்தேவி இராணுவ நடவடிக்கை என்பவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் முத்திரை பதித்தாள் சுடரொழி. ஒரு கரும்புலியாகப் பயிற்சி முடித்து க்கொண்டபின் ஏறத்தாழ ஒருவருடம் வெடிமருந்துப் படகுடன் அலைந்து திரிந்தாள். இலக்குக் கிட்டவில்லை. சுண்டிக்குளக் கடற்பரப்பில் நின்ற டோராவைத் தாக்க இவளுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால்,
இலக்கை நெருங்க முன்னரே எதிரிகளின் தாக்குதலால் சுடரொழியின் இரண்டு கைகளிலும் காயம் ஏற்பட்டது. கூடவே அதேபடகில் இருந்த கரும்புலி பார்த்திபனுக்கு ஏற்கெனவே ஒருகால் முழங்கால்வரை இல்லை. அந்தக் காலிலேயே மீண்டும் காயம் ஏற்பட்டது. அதனால் இருவரும்
கரைதிரும்ப வேண்டி நேரிட்டது. சுடரொழிக்கு இரண்டு கைகளும் இயலாமல் போய்விட்டது. கொஞ்சநாள் ஓய்வெடுக்குமாறு கூறிய பொறுப்பா ளருடன் சண்டை பிடித்து, தனக்கு வாய்ப்புத் தருமாறு கேட்டாள். அவளுக்கு அந்த வாய்ப்பு ‘ஓயாத அலைகள்’ தாக்குதலின் போது கிடைத்தது. இந்தச் சண்டையில் சுடரொழியுடன் கூட படகில் கூடவந்தது செல்லப்பிள்ளை. கரும்புலி பார்த்திபனும் சுடரொழியும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒன்றாகத்தான் இடிப்போம் என்று சொல்லிக்கொள்வார்கள். தன் நண்பனை விட்டுப் பிரிந்தது சுடரொழிக்குக் கவலைதான். ‘ஓயாத அலைகள’ தாக்குதலின் போது ‘ரணவிரு’ கரும்புலிகளின் இலக்கானது. முதலில் அதனுடன் மோதிய கரும்புலிப் படகு வெடிக்கவில்லை .
தவறிவிட்டது. அதிலிருந்த இன்னிசைக்குக் காயம். கூடவே இருந்த மிதுபாலன் படகைக் கரைக்குத் திருப்பினார். அடுத்து பார்த்திபனின் படகு இலக்கில் மோதிச் சிதறியது. ‘ரணவிரு’ ஆட்டம் கண்டது. தன் நண்பனின் அடியைத் தொடர்ந்து சுடரொழியும் தன் படகுடன் இலக்கில் மோதினாள்.
1996-07-19 அன்று மாலை அந்தக் கரும்புலிகளின் மூச்சடங்கியது. அவர்களின் இறுதிக்கணங்களைச் சுமந்த முல்லைக்கடல் வீச்சுடன் மூசியது.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”