
21/07/2025
“தமிழீழ இயற்பியலுக்கெதிரான சதிகாரச் செயலை முறியடிப்போம்”
அன்பார்ந்த இத்தாலி வாழ் தமிழீழ மக்களே !
“உலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கிறது. தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது.” இது தமிழீழத் தேசியத்தலைவரின் கொள்கை வடிவம். இக்கொள்கை வடிவத்தை, 2009ம் ஆண்டிற்கு பின்பாக தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் இல்லாமல் அழிப்பதற்கு நாசகாரச்சக்திகளால், பல சதிவலைகள் மேற்கொண்டபோதெல்லாம், தமிழீழ மக்களின் பலத்தினாலும் தேசியத்தலைவரின் சிந்தனையின் வலுவினாலும் அச்சதிமுயற்சிகள் முறியடிக்கப்பட்டன . இருந்தும், இந்நாசகாரச்சக்திகள் , தொடர்ந்தும் தமது நிலைப்பாட்டில் எந்தமாற்றத்தையும் செய்யாததோடு மாறாக புதிய வழிமுறைகளில் பல நாசகாரச் செயல்வடிவத்தை அரங்கேற்றியும் வருகின்றன. அதில் ஒன்று, தேசியத்தலைவரின் வருகை இரண்டு , தேசியத் தலைவருக்கு விளக்கேற்றல் நிகழ்வு. இவையிரண்டும் ஒரே இலக்கை அழிக்கும் இரு நிகழ்ச்சிச் திட்டங்களாகும். இந்த சதிமுன்னெடுப்புகள் சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் விளக்கேற்றல் நிகழ்வை ஆகஸ்து 2 ஆம் நாள் சுவிற்சர்லாந்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. இவ்வாறான, தமிழீழச் சித்தாந்தத்தை சிதைக்கும் சதிமுயற்சிகளுக்கு இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்பு குழு, இத்தாலி தமிழர் ஒன்றியம் அத்துடன் தேசிய உப கட்டமைப்புகளும் ஒன்றாக இணைந்து கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்துவதோடு, இந்நாசகார நிகழ்வுகளை அனைவரும் புறக்கணிக்க வேண்டுமென அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
நாம் ஏன் இதனை எதிர்க்கின்றோம் ? வரலாறு என்பது மிகப்பெரியது. அதை நாம் கொண்டிருக்கும் தத்துவங்களைக் கொண்டே பார்த்துப் புரிந்து கொள்கிறோம். நாம் கற்றுக்கொள்ளும் தத்துவங்கள் விரிவடையும் பொழுது, வரலாற்றைப் பற்றிய நமது பார்வையும் மாறுகிறது. அதுபோன்ற மாற்றமே அண்மையில் அமெரிக்க இராணுவத்தளபதி மெக்கிரிசுட்டல் எழுதிய “Team of Teams” என்ற தனது நூலில்( குழுக்களின் குழு ) தமிழீழத் தேசியத்தலைவரைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில், “பிரபாகரன் அவர்கள் அதி புத்திகூர்மை கொண்ட தலைவர். போர் உத்திகளில் மட்டுமல்ல, எவ்வாறு சிறந்த அமைப்புகளை உருவாக்குவது என்பதிலும் முன்னோடியாக இருந்தவர். நாம் புலிகளிடமிருந்து கற்பது என்பது என்றும் முடிவுறாததாகவே இருக்கும். நான் “ ஈழப்போரிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்” என்ற தொடரை எழுதி முடித்தபின், ஓரளவு முக்கியமான அனைத்து உத்திகளையும் கண்டறிந்துவிட்டேன் என்றே நினைத்தேன், ஆனால், இக்கட்டுரையை எழுதும் பொழுதுதான் எவ்வளவு பெரிய ஓட்டை விட்டிருக்கிறேன் என்பது புலப்படுகிறது. பிரபாகரன் அவர்களையும், புலிகளையும், ஈழப்போரையும் என்றுமே யாராலும் முழுதாகப் புரிந்துகொள்ள முடியாது. புதுப்புது தத்துவங்களின் வழியாகப் பார்க்கும்பொழுதே, நமது பார்வை மேலும் விரிவடையும். ஈழப்போர் நமக்கு தொடர்ந்து பாடங்களை கற்பித்துக்கொண்டே இருக்கும். ஈழப்போர் என்பது தமிழர்
வரலாற்றின் மாபெரும் பரிணாமம். அது தனக்கு முந்தைய மற்றும் பண்டைய வரலாற்று, பண்பாட்டு, அறிவுக் கூறுகளை உள்வாங்கியது மட்டுமில்லாமல் புதுமையைப் படைத்தது. ஈழப்போரின் விளைவாக தமிழ்த்தேசியம் பாரிய முன்னேற்றங்களை இன விடுதலை, பண்பாடு, வாழ்க்கைத் தத்துவம், போரியல் உத்திகள், தலைமைத்துவம், உலக அரசியல், சமூகம் என பல துறைகளில் கண்டுள்ளது. நாம் மாபெரும் தேசம் படைக்க என்ன தேவையோ, அதற்கான மிக பலமான அடித்தளத்தை பிரபாகரனும் மாவீரர்களும் கட்டிவிட்டனர். இனி மிச்சம் இருப்பதை கட்டி முடிப்பது மட்டுமே நமது வேலை .பிரபாகரனின் தலைமைத்துவ பண்புகளையும் புலிகளின் போர்முறையையும் புரிந்துகொள்ள இது முக்கியமான தத்துவம் அதன் பெயர் தான் ” குழுக்களின் குழு ” என்று அமெரிக்க இராணுவத்தளபதி மெக்கிரிசுட்டல் தனது நூலில் (குழுக்களின் குழு ) குறிப்பிடுகின்றார்.
எமது தேசியத் தலைமையின் சிந்தனையை அழிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அது சிங்களப் பேரினவாதத்தாலோ, அதன் அடிவருடிகளாலோ முடியாத காரியம்.எமது தேசியத்தலைவர் தமிழீழ விடுதலையின் ஒளிரும் சித்தாந்தம். அந்த விடுதலைப்பேரொளியை விளக்கேற்றி அணைத்துவிடலாம் என எவரும் கனவுகாணவேண்டாம். அதனூடாகத் தமிழீழ கோட்பாட்டைத் தமிழீழ மக்களிடமிருந்து பிரித்துவிடலாம் என்று எண்ணிய சிறிலங்கா மற்றும் வல்லாதிக்க சக்திகள் கடந்த பல வருடங்களாக தோல்வியைத் தழுவிய நிலையில் புதிய யுக்தியாக “விளக்கேற்றுதல்” நிகழ்ச்சி நிரலை திணித்து தமிழரின் தாகமான தமிழீழத் தாயகக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் உளவியல் போரை ஈழத்தமிழர் மேலும் தேசியக் கட்டமைப்புகள் மேலும் குறிப்பாக தமிழீழக் கோட்பாட்டை புலம்பெயர் தேசங்களில் முழு வீச்சுடன் முன்னெடுத்து வரும் இளையோர்களையும் குறி வைத்து நகர்த்தப்படும் நிகழ்ச்சி நிரலாகவே நாம் பார்க்கின்றோம்.
பேரன்புமிக்க இத்தாலி வாழ் தமிழ் மக்களே!
காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை, நாம் கண்டறிந்து முறியடித்து வருகின்றோம். எனவே, தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படும் உண்மைக்குப் புறம்பான பரப்புரைகளையும், செயற்பாடுகளையும் புறந்தள்ளி, விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
தமிழீழத் தேசியத்தலைவர் என்னும் பேராளுமைச் சிந்தனையின் வழிகாட்டலில், தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்பதோடு, தமிழினத்தை அழிப்பதற்கான எதிரிகளின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்காமல், மாவீரர்கள் காட்டிய வழித்தடத்தில், தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் ஒளிரும் சிந்தனைப் பாதையில் உறுதியுடன் வழிநடந்து, தமிழீழ விடுதலை நோக்கித் தொடர்ந்தும் போராடுவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக!
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

