
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு பிரான்ஸ் தலைநகரில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரி லெப் ஜெனரல் ஜகத்டயஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தும் விதத்திலான பிரான்சின் செயற்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து பிரிட்டிஸ் பிரஜையான அன்ரன் பாலசிங்கத்தின் நடவடிக்கைகளை பிரித்து பார்க்கமுடியாது, மன்னிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கனடா இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என தெரிவித்து இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளிற்கு பயணத்தடையை விதித்துள்ளதன் பின்னணிலேயே அன்டன் பாலசிங்கத்திற்கு பிரான்சில் சிலையை நிறுவும் நடவடிக்கைகளை பார்க்கவேண்டும் என ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
சரியான நிலைப்பாட்டை முன்வைப்பதற்கான ஒருங்கிணைந்த உத்தியில்லாத நிலையில் வெளிநாட்டு அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்புலம்பெயர்ந்தோர் தங்கள் பிரிவினைவாத திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்துவருகின்றனர் என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவஅதிகாரி ஆனால் இந்த சவாலை எதிர்கொள்வதில் எங்கள் நாடாளுமன்றம் முற்றிலும் அலட்சியமாக உள்ளது,இலங்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்கொள்ளும் தனது கடப்பாட்டினை அலட்சியம் செய்கின்றது என தெரிவித்துள்ளார்.
அவர்கள் விடுதலைப்புலிகளை பரிசுத்தமானவர்களாக்க பகல்இரவாக அவர்கள் செயற்படுகின்றனர் ,நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் கொடிகளை ஏற்றுவதும் அவர்களின் சிலைகளை நிறுவுவதும் இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதி என ஜகத்டயஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ்சிலை தொடர்பில் எங்களின் தூதரகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அரசாங்கம் பொதுமக்களிற்கு தெளிவுபடுத்தவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சிலையை நிறுவும் திட்டம் இடம்பெறுகின்ற போதிலும் அரசாங்கமோ எதிர்கட்சியோ இதுவரை இது குறித்து வாய்திறக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.