செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழி வழக்கின் 19 ஆம் நாள் வியாழக்கிழமை (24.07.2025) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதவா குழுவினர்,
சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், தடயவியல் பொலிஸார், குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தினர், தொல்லியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவரூபி சஜிதரன் ஆகியோரின் பங்கேற்புடன் அகழ்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
அகழ்வு பணிகள் தொடர்பாக வியாழக்கிழமை (24.07.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே ஆழ்ந்தெடுக்கப்பட்ட 67 மனித எலும்பு கூடுகளுடன் புதன்கிழமை (23) பிற்பகலில் இருந்து இன்று வரை 9 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 76 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
நேற்றைய நாளில் புதிதாக மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 88 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை 20வது நாளாக அகழ்வு பணிகள் தொடரும்.
சிறு போத்தலொன்றும் இரும்புகள் என்று நம்பப்படுகின்ற பல கட்டிகளும் எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.