
ஜிம்பாப்வேயில், முத்தரப்பு ‘டி-20’ தொடர் நடக்கிறது. இதன் பைனலுக்கு (ஜூலை 26) நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் ஏற்கனவே முன்னேறின. ஹராரேயில் நடந்த கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பெர்ட் (75), ரச்சின் ரவிந்திரா (63) கைகொடுத்தனர். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 190 ரன் எடுத்தது. பிரேஸ்வெல் (26) அவுட்டாகாமல் இருந்தார்.
கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு டோனி முன்யோங்கா (40), டியான் மையர்ஸ் (22), தஷிங்கா முசேகிவா (21) ஆறுதல் தந்தனர். ஜிம்பாப்வே அணி 18.5 ஓவரில், 130 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’டாகி தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் இஷ் சோதி 4, மாட் ஹென்ரி 2 விக்கெட் சாய்த்தனர்.
சர்வதேச ‘டி-20’ அரங்கில் 150 விக்கெட் சாய்த்த 3வது பவுலர், 2வது நியூசிலாந்து வீரரானார் இஷ் சோதி. இவர், 126 போட்டியில், 150 விக்கெட் சாய்த்துள்ளார். ஏற்கனவே நியூசிலாந்தின் டிம் சவுத்தீ (164 விக்கெட், 126 போட்டி), ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (161 விக்கெட், 96 போட்டி) இம்மைல்கல்லை எட்டினர்.