
ஐந்து போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன்-சச்சின் டிராபி’ தொடரில் இங்கிலாந்து அணி, 2–1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட், மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து 225/2 எடுத்து, 133 ரன் பின்தங்கியிருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய ‘வேகங்கள்’ தடுமாறினர். ஆரம்பத்தில் ‘லெக்’ திசையில் பந்துவீசி ரன்னை வாரி வழங்கினர். தொடர்ந்து துல்லியமாக பந்துவீச தவற, அனுபவ ஜோ ரூட், போப் சுலபமாக ரன் சேர்த்தனர். பும்ரா, கம்போஜ் ஓவரில் சாதாரணமாக பவுண்டரிகள் விளாசினர். இந்த சமயத்தில் கேப்டன் சுப்மன் கில் ‘ஸ்பின்னர்’களை பயன்படுத்தாமல் தவறு செய்தார். டெஸ்டில் போப், தனது 16வது அரைசதம் எட்டினார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 332/2 ரன் எடுத்திருந்தது.
மூன்றாவது விக்கெட்டுக்கு ரூட்-போப் 144 ரன் சேர்த்த நிலையில், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் திருப்பம் ஏற்படுத்தினார். இவரது ‘சுழல்’ வலையில் முதலில் போப் (71) சிக்கினார். சிறிது நேரத்தில் ஹாரி புரூக்கையும் (3) அவுட்டாக்கினார். இங்கிலாந்து 349/4 ரன் திடீரென சரிந்தது. பின் ரூட், கேப்டன் ஸ்டோக்ஸ் விவேகமாக விளையாடினர்.
புதிய பந்து எடுத்தும் பலன் கிடைக்கவில்லை. கம்போஜ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரூட், டெஸ்டில் 38வது சதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 150 ரன் அடித்து ஜடேஜா சுழலில் சிக்கினார். ஜேமி ஸ்மித்(9), வோக்ஸ்(4) நிலைக்கவில்லை. 3வது நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 544/7 ரன் எடுத்து, 186 ரன் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்டோக்ஸ் (77), டாசன்(21) அவுட்டாகாமல் உள்ளனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடக்க உள்ளது.