ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து காசாவை முழுமையாக மீட்கும் முயற்சியில் மேற்காசிய நாடான இஸ்ரேலின் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

உணவு தட்டுப்பாடு இந்த தாக்குதலில் இதுவரை பயங்கரவாதிகள், பொது மக்கள் என 60,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நீடிக்கும் போரால் மக்கள் உணவு, குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர்.
ஐ.நா., அமைப்பின் வாயிலாக முன்னர் உணவு, மருந்து, குடிநீர் ஆகியவை வினியோகம் செய்யப்பட்டன. தினசரி நுாற்றுக்கணக்கான டிரக்குகளில் இவை வந்தன.
இவற்றை ஹமாஸ் பயங்கரவாதிகள் திருடிச் செல்வதாக குற்றஞ்சாட்டி அந்த நிவாரண டிரக்குகள் வருவதற்கு இஸ்ரேல் தடை விதித்தது.
அதன் பின் மே மாதம் முதல், அமெரிக்காவில் பதிவு செய்த காசா மனிதாபிமான அறக் கட்டளை மூலம் நான்கு மையங்கள் அமைத்து உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப் படுகின்றன. இந்த முறையில் தினசரி 65 டிரக்குகள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றன.
நிவாரணம் கிடைக்காதவர்கள் இஸ்ரேல் படைகளிடம் மோதும் போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த மே முதல் இதுவரை இதுபோன்ற தாக்குதல்களில் காசாவை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அழுத்தம் இந்நிலையில், போதிய உணவு கிடைக்காமல் காசாவில் பட்டினி பிரச்னை பெரிய அளவில் உருவெடுத்துள்ளதால், இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காசா சிட்டி, டெய்ர் அல்- பலாஹ் மற்றும் முவாசி ஆகிய மக்கள் அடர்த்தி நிறைந்த மூன்று பகுதிகளில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
மேலும், காசாவில் மாவு, சர்க்கரை, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் அடங்கிய பைகளை வான்வழியாக வீசியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.