முல்லைத்தீவு – மல்லாவி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்தராசா சஜீவனின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக, ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், மல்லாவி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தபப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மல்லாவி பொலிஸாரை எச்சரித்துள்ளார்.

அதேவேளை சஜீவனின் படுகொலை விவகாரம் தொடர்பில் தம்மால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் கவனத்திற்கு கொண்டுவரப்படுவதுடன், இந்த விவகாரத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு தம்மால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும் எனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மல்லாவியில் இன்று (29.07.2025) சஜீவனின் படுகொலைக்கு நீதி கோரி, மல்லாவி பொது அமைப்புக்கள் மற்றும் மல்லாவி வர்த்தக சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் பங்கேற்றபோதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மல்லாவி பகுதியைச் சேர்ந்த இளைஞன் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளம் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலருக்கெதிராக சஜீவனின் குடும்பத்தினரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாடு அளிக்கப்பட்டும் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பொலிஸாரால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அந்த வகையில் சஜீவனின் படுகொலை இடம்பெற்று பத்தொன்பதாம் நாளன்று கடந்த 16.08.2024 அன்றும், அதன் பிற்பாடு ஏழு மாதங்கள் கடந்து, 14.03.2025 அன்றும் படுகொலைக்கான நீதி கோரி, மல்லாவி வர்த்தக சங்கம் மற்றும் மல்லாவி பொது அமைப்புக்கள், பொதுமக்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டன. இருப்பினும் இந்தப் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை.
அதன் தொடர்ச்சியாக சஜீவனின் படுகொலை இடம்பெற்று ஒரு வருடமாகியுள்ள நிலையிலும், கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இன்று (29) சஜீவனின் படுகொலைக்கு நீதி கோரி மல்லாவி வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள், பொதுமக்கள், ரவிகரன் ஆகியோர் இணைத்து ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது மல்லாவி பேருந்து நிலைய வளாகத்திலிருந்து மல்லாவிப் பொலிஸ் நிலையம் வரை சென்றது.
சஜீவனுக்கு நீதி கிடைக்கவேண்டும், கொலைக் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பியும், பதாதைகளைத் தாங்கியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதன்போது பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அவ்வேளை, ரவிகரன் தெரிவிக்கையில்,
ஒரு வருடகாலமாக சஜீவனின் கொலைக்கு நீதி கோரி இந்த மக்கள் போராடிவருகின்றனர். இருப்பினும் இந்தப் படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை.
இந்தப் படுகொலைக்கான நீதி கிடைக்கவேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் இந்த கொலைக்கான நீதி கிடைக்கவில்லை எனில், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், மல்லாவி பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டு, பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இந்தப் படுகொலை விவகாரத்தில் மல்லாவிப் பொலிஸாரின் அசமந்தப்போக்கு பற்றி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிற்கு தெரியப்படுத்துவதுடன், இந்த படுகொலைக்கான நீதியை உடனடியாக வழங்குமாறும் கோரவுள்ளேன் என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது இந்தப் படுகொலை விவகாரம் குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த படுகொலைக்கு விரைந்து உரிய நீதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது சஜீவனின் படுகொலைக்கு விரைந்து நீதி வழங்குமாறு கோரி மல்லாவி பொது அமைப்புக்கள் மற்றும் மல்லாவி வர்த்தக சங்கம் மற்றும் மல்லாவி பொதுமக்கள் சார்பாக துரைராசா ரவிகரனால் மகஜர் ஒன்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.






