
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின், வோ மாநில லவுசான் தமிழ்ப்பள்ளியின் முதல்வர் அந்தோனிப்பிள்ளை இரட்ணராஜா அவர்கள், 25.07.2025 அன்று சாவடைந்தார் என்ற செய்தி சுவிற்சர்லாந்து வாழ் தமிழ்மக்களையும் புலம்பெயர் கல்விசார் குமுகாயத்தையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இரட்ணராஜா அவர்கள், 1994 ஆம் ஆண்டு தமிழ்க்கல்விப்பணியில் தன்னை இணைத்து, சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச்சேவையின் வோ மாநிலத்தின் லவுசான் தமிழ்ப்பள்ளி முதல்வராக 31 ஆண்டுகள் தன்னார்வத் தொண்டராக, எந்த எதிர்பார்ப்புகள், கொடுப்பனவு ஏதுமின்றி அர்ப்பணிப்புடன் பணிசெய்த தாய்மொழிப் பற்றாளராவார். அத்துடன், தமிழ்க்கல்விச்சேவையின் பிரெஞ்சு வலயத்தின் துணை இணைப்பாளராக 10 ஆண்டுகள் பணிசெய்த காலங்களில், கல்விசார் ஒருங்கிணைவினூடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஆளுமைமிக்கவராவார்.
இவர் தமிழ் மாணவர்களைத் தனது மாநிலத் தமிழ்பள்ளிகளில் பெருமளவில் இணைத்து, அவர்களுக்குரிய கற்றல் செயற்பாட்டினை ஒழுங்குபடுத்தி, அவை சிறப்பாக நடைபெறும் வகையில் திட்டமிட்டு நெறிப்படுத்தியவராவார்.
ஆரம்பகாலங்களில், வோ மாநிலத்தில் அண்ணளவாக 30 மாணவர்களே கற்றலினை மேற்கொண்ட சூழலில், தாய்மொழிக் கல்வியில் பிள்ளைகளை இணைக்கின்ற வேலைத்திட்டங்களூடாக தற்போதுவரை 300 இற்கும் மேற்பட்ட மாணவர்களை இணைத்து தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய முதல்வராவார்.
தாய்மொழிக்கல்வியுடன் கலை, பண்பாடுகளைக் கற்பிப்பதிலும் விளையாட்டுகளில் மாணவர்களை ஊக்குவிப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியதுடன் தனது வயதுமுதிர்ச்சியால் உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதும் அவற்றைப் பொருட்படுத்தாது, தமிழே தன் உயிர் என வாழ்ந்து எம் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிகளில் இணைக்கும் உன்னதபணியில் இறுதிவரை தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவராவார்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடம் அன்பாலும் பண்பாலும் நல்லுறவைப் பேணி, தனது பணியினை செம்மையாக ஆற்றிய இவர், தமிழ்ப்பள்ளிகளின் பழைய மாணவர்களைத் தமிழ்க்கல்விச் செயற்பாடுகளில் இணைத்து, எதிர்காலச் செயற்திட்டங்களில் அவர்கள் இணைந்து பயணிக்கும் வகையில் ஒன்றிணைத்த சான்றோனாவார்.
புலம்பெயர்ந்த காலத்திலிருந்து இறுதிவரை, தாய்மொழிப்பற்றோடு தமிழீழத் தேசியத் தலைவரையும் விடுதலைப்போராட்டத்தையும் உளமார ஏற்று, அதற்கு உறுதுணையாக இருந்து, அனைத்துச் செயற்பாடுகளிலும் தனது குடும்பத்தவர்களையும் இணைத்துப் பயணித்ததோடு, தாயகத்தில் வாழும் உறவுகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டவராவார்.
புலம்பெயர்வாழ்விலுள்ள பல சவால்களுக்கு மத்தியிலும் தமிழீழத்தையும் தாய்மொழியையும் தன் நெஞ்சத்தில் சுமந்து, தமிழ்மொழிக்காக மிகவும் அர்ப்பணிப்பு மிக்க வாழ்வினை வாழ்ந்த இவரை, நாம் இழந்து நிற்கின்றோம். இவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச்சேவை குமுகாயத்தினர் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், அந்தோனிப்பிள்ளை இரட்ணராஜா அவர்களின் நீண்டகாலத் தாய்மொழிப்பணிக்காக இவரை, “தமிழ்ப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
