

எழுதியவர்
ஈழத்து நிலவன்

இது உளவின் இரகசிய மொழி,
இது வார்த்தையின் கூட்டு ஒப்பந்தம் —
“தேசியம்” எனும் சொல்லில் நுழையும் பாம்பு,
“தியாகம்” எனும் உணர்வில் நுழையும் பாம்பு.
வீரச் சொற்கள் வெடிக்கின்றன —
ஆனால் உண்மை அந்த ஒளியில் இல்லை!
போரின் புகைப்படம் காட்டப்படுகிறது,
பின் கிழங்கு நிழலில் கையெழுத்துகள் நடக்கின்றன.
வீரச்சாவுகள் காப்பாற்றப்படவில்லை,
அவை மேடை உரைகளில் விற்கப்படுகின்றன.
பேரறிஞர்கள் நினைவுகள்,
ரேட்டிங் வேட்டையில் ஒலிக்கின்றன.
பசுமைச் சுவரில் எழுதப்பட்ட வரலாறு,
மலம்துடைக்கும் சுவரில் அழிக்கப்படுகிறது.
“இதோ உங்களின் தலைவர்!” என்று சொல்கின்றார்,
ஆனால் அந்த தலைவர் சிங்களமாநிலத்திற்கு முடிசூட்டுகிறார்!
அறிந்து கொள்ளுங்கள் —
இந்திய உளவின் நிழல்,
இப்போது தமிழரின் நெஞ்சில் பதிக்கப்பட்டு விட்டது.
நம் காவியப் பாடல்களையும்,
வணிகப் பேக்கட்டிங்கில் வீசுகின்றனர்.
“தலைவர்” என்று ஆடைகள் அணிவிக்கப்படுகிறார்,
அவர் வெறும் வெண்கலப் பொம்மை — சாயம் பூசப்பட்டவர்.
“சுதந்திரம்” பேசச் செய்கிறார்,
ஆனால் இந்திய இராஜதந்திரக் கூடத்தில் வாழ்கிறார்.
சந்தர்ப்பவாத ஊடகங்கள் கண்ணீர் வடிக்கின்றன —
“பரிதாபம்! நினைவோம்!” என கதைக்கின்றன.
பழைய போர்ப்புகைப்படங்களை ஃபில்டருடன் பகிர்கின்றனர்,
இன்றைய உண்மையை மறைக்கவே!
விமான தளத்தில் உளவாளிகளுடன் கைகோர்க்கும் போது,
மறுநாளே எங்கள் உறவுகள் கைது செய்யப்படுகின்றனர்.
பசுமைத் தாள்களுடன் நிற்கும் போராளிகள்,
அவர்களுக்கு கையொப்பமிடும் போது — நாமோ தூங்கினோம்!
சொல்லாடல்கள் —
நம் மொழியில் தான், ஆனால் நம் நோக்கில் இல்லை.
கண்ணீர் உரைகள் —
அவர்கள் மேடைகளின் நாடகம்.
தமிழரின் தியாகம் —
அது ஒரு புனிதம்.
அதை துண்டு துண்டாக விற்கும் பாவிகள்,
தங்களைக் காவலர் போன்று காட்டுகின்றனர்.
நாம் எழ வேண்டும் —
வெறுப்பில் அல்ல,
விசாரணையின் வெளிச்சத்தில்.
யார் உண்மையாக நின்றனர்,
யார் நடனமாடினார்கள்?
தலைவர்கள் வாழ்ந்த கிராமங்களைக் தேடு,
அவர்கள் உயிர் விட்ட மண்ணில் நடந்துபார்.
அவர்கள் பெயரில் பேசும் போலி முகங்களை,
நமது வாக்கால், குரலால், நினைவால் வீழ்த்துவோம்!
❈❈❈
தாயின் எச்சரிக்கை
> “என் மண்ணை நினை — என் மக்களை நினை —
ஆனால் நினைவுகளின் பெயரில் வஞ்சகர்களை விட உதவாதே!”