வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்தவர் சாமுவேல், 21. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள கல்லுாரியில் படித்து வந்தார். இதுதவிர, குவஹாத்தி நகராட்சி அலுவலகத்தில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார்.

கடந்த 25ம் தேதி அதிகாலை, குவஹாத்தியின் பிரதான சாலையில் அங்குள்ள தெரு விளக்குகளை பழுதுபார்க்கும் பணியில் சாமுவேல் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக 120 கி.மீ., வேகத்தில் சென்ற, ‘ஸ்கார்பியோ’ கார், சாமுவேல் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற காரை, அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்றனர்.
கஹிலிபாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்ற அக்காரில் இருந்து, அசாமி திரைப்பட நடிகை நந்தினி காஷ்யப் இறங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் நந்தினி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, காயமடைந்த இளைஞரின் மருத்துவ செலவை தான் ஏற்றுக்கொள்வதாக நடிகை தெரிவித்தார். இதையடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
எனினும், நந்தினி காஷ்யப் அளித்த வாக்குறுதிப்படி மருத்துவ செலவை அவர் அளிக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சாமுவேல், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நடிகை நந்தினி விபத்து ஏற்படுத்தியதை உறுதி செய்த போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.