இதில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட ‘ஆண்டர்சன் – சச்சின் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து, 2–1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் இன்று லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது
இத்தொடரின் 4 போட்டிகளும், ஐந்து நாள் முழுமையான நடந்தன. மைதானத்தில் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். இருப்பினும் தொடர்ச்சியான போட்டிகளால் இரு அணி தரப்பிலும் வீரர்கள் காயம், சோர்வு என பல பிரச்னைகள் உள்ளன.
அதேநேரம், சுப்மன் கில்-கிராலே மோதல், ‘டிரா’ செய்ய விரும்பிய ஸ்டோக்சிற்கு, இந்தியா மறுப்பு தெரிவித்தது, ஆடுகள பாராமரிப்பாளருடன் வார்த்தை மோதல் என பல்வேறு சர்ச்சைகள் காரணமாக தொடரின் ‘விறுவிறுப்பு’ அதிகரித்தது.
தற்போது, ஐந்தாவது டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை இழக்காமல் தப்பிக்கலாம் என்ற நிலையில் இந்தியா களமிறங்குகிறது.
இந்திய அணிக்கு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் (291 ரன்) எழுச்சி பெற்றால் நல்லது. இதுவரை 998 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் (511) மீண்டும் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தலாம். சாய் சுதர்சன் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். கேப்டன் சுப்மன் கில் (722), ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா (454) அணியின் முதுகெலும்பாக திகழ்கின்றனர். ரிஷாப் பன்ட் (479) எலும்பு முறிவு காரணமாக விலகியதால், 7வது இடத்தில் துருவ் ஜுரல் வாய்ப்பு பெறலாம்.
இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சில் சிராஜ் (14 விக்.,) கைகொடுக்கிறார். பணிச்சுமை காரணமாக பும்ரா (14) விலகினால் அர்ஷ்தீப் அறிமுகம் ஆகலாம். கம்போஜிற்கு பதில் ஆகாஷ்தீப் (11 விக்.,) சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
‘ஸ்பின்னர்’ குல்தீப் களமிறங்குவது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தாலும், பேட்டிங்கை பலப்படுத்தும் வகையில், ஷர்துல் தாகூர் இடத்தை தக்கவைக்கலாம். மான்செஸ்டரில் இந்தியாவை கரை சேர்க்க கைகொடுத்த வாஷிங்டன் சுந்தர் (7), ஜடேஜா (7) மீண்டும் ஒளிர்ந்தால் வெற்றியுடன் தொடரை முடிக்கலாம்.
ஸ்டோக்ஸ் காயத்தால் விலகியதால் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி, போப் தலைமையில் களமிறங்குகிறது. இந்தியாவின் இடதுகை பேட்டர்களுக்கு தொல்லை தந்த வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர், சுழற்பந்து வீச்சாளர் டாசன் (62 ஓவர், 1 விக்.,), கார்ஸ் (4ல் 9 விக்.,) நீக்கப்பட்டனர்.
இருப்பினும் துவக்கத்தில் டக்கெட் (365 ரன்), கிராலே (212) அடுத்து வரும் போப் (257), ஜோ ரூட் (403), புரூக் (317), ஸ்மித் (424) என பலரும் பேட்டிங்கில் உதவுகின்றனர். பவுலிங்கில் வோக்ஸ் (10 விக்.,), டங்க் (11), உள்ளனர். அட்கின்சன், ஓவர்டன், பெத்தெல் வருகை பலம் சேர்க்கலாம்.
இங்கிலாந்து அணிக்காக இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்தவர் ‘ஆல் ரவுண்டர்’, கேப்டன் ஸ்டோக்ஸ் (304 ரன், 17 விக்.,). தேவையான நேரத்தில் விக்கெட் சாய்த்து திருப்பம் ஏற்படுத்தினார். தற்போது வலது தோள்பட்டை காயம் காரணமாக முக்கியமான டெஸ்டில் விலகினார். அணி விபரம்: போப் (கேப்டன்), டக்கெட், கிராலே, ஜோ ரூட், பெத்தெல், ஜேமி ஸ்மித், வோக்ஸ், அட்கின்சன், ஹாரி புரூக், ஓவர்டன், டங்க்.