
கப்டன் எழிலரசன்
பஞ்சலிங்கம் பாலமுரளி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
பாதங்கள் பார்த்துசுவடுகள் காத்திருக்கின்றன
மணலாறு; தமிழீழப் போராட்ட வரலாற்றின் அழிக்கமுடியாத அத்தியாயம்.
புலிச்சேனையை அரவணைத்தகங்காருத் தொட்டில்.
தமிழீழ விடுதலை என்ற அக்கினியைத் தன்மடி மீது வைத்துச் சீராட்டிய தாய், அக்கினியின் அந்திவாரமான எம் தலைவரைப் பொத்தி வைத்த புனிதபூமி எதிரியின் கணைகளை யெல்லாம் தன் நெஞ்சில் தாங்கிய கவசம். குரங்குகளின் சில்மிசங்கள். நீரேரிகளின் மீது வெண்பூக்களைத் தூவியது போல் மிதக்கும் கொக்குகள். மனிதவாடை கண்டவுடன் தாவியோடும் கரடிகள். மலைக்குன்றென அசைந்தோடும் மூர்க்க யானைகள். உயர்ந்த மரங்களில் தாவியோடும் மர அணில்கள். தலைக்குமேல் குடைபிடிக்கும் பச்சையங்கள். அரணாக காத்து நிற்கும் கற்பாறைகள். திடீரென வெகுண்டெழு தோடும் காட்டாறுகள். இவைதான் எம் தலைவரை காத்துநின்ற இதயபூமி.
1989 இன் இறுதிக்காலம். ‘செஞ்சோலை” எனும் பெயர் சூடிய 5வது – பயிற்சி முகாம். இருநூறுக்கு மேற்பட்ட போராளிகளைப் புடம் போட்ட பாசறை. இப்பாசறையில்தான் விந்திரனும் பயிற்சியெடுத்தான். குறுளைகளை ஒன்றாக்கிய முதல் மூன்று பிரிவுகளில் விந்திரனும் ஓர் குறுளை. சிறந்த பியிலுனன். சிறந்த ஒழுக்சீலன். தன் திறமையால் – பொறுப்பாளரின் கண்களைத் தன்பால் ஈர்த்தவன். அடிப்படைப் பயிற்சி முடிந்தகையோடு விசேட பயிற்சிக்கு தெரிவானவள்.
ஒரு போராளியாக விந்திரனை தான் சந்தித்தது. என் நினைவுப்பரப்பில் குத்திய சிறு முள்ளாக இன்னும் என் இதயத்தை நெருடுகிறது. “அமுதகானம்”, காட்டிலுள்ள ஒரு முகா மின் பெயர். காட்டிலுள்ள போராளிகளிற்கு உணவளிக்கும் அட்சயபாத்திரம். எம்முகாமிற்கான உணவை எடுக்கச்சென்றேன். அங்குதான் விந்திரனையும் கண்டேன்.
”எங்கேயோ பார்த்த முகமாகக் கிடக்கு’ உயிரில் கலந்திருந்த நினைவுகளை மீட்டினேன். மூளைத் திசுக்களைக் கசக்கினேன். அவன் சிரித்தபடி என்னை அணுகினான். பதினைந்து வயதுப் பால் முகம், பால் முகத்தில் கரிய, சிறிய கண்கள். கண்களிலே மற்றவர்களை ஊடுருவும் திறன், நிமிர்ந்த உறுதியான நடை. அவனது உயரத்தின் அரைவாசியை விழுங்கியிருக்கும் அவனது ஆயுதம். மொத்தத்தில் அவனது தோற்றம் வசீகரமானது. என் மூளைச் செல்களின் போராட்டம் ஓய்ந்தது. அவன் யார் என்று அறிந்து கொண்டேன். இவன் வல்வெட்டித்துறைப் பெடியன்.வல்வெட்டித்துறை போராட்டத்தீக்கு தீக்குச்சி கொடுத்த இடம்.
எத்தனையோ மாவீரர்களும் போராளிகளும் தவழ்ந்த கரையோரநகரம். எல்லாவற்றிற்கும் மேலாக எம் தலை வரை தாலாட்டிய தொட்டில். விந்திரனின் தொப்புள்கொடி உறவும் இங்குதான். 1974 சித்திரை மாதம் 19ம் திகதி – இது விந்திரனின் பிறந்த தாள்.அம்மா புவனேஸ்வரி, அப்பா பஞ்சலிங்கம். இவர்கள் தங்கள் மகனுக்கு சூட்டிய பெயர் பாலமுரளி. மூன்று அக்காவுக்கு அடுத்ததாக இவன். ஒரு தம்பியும் உண்டு. ஆரம்பக்கல்வி சிவகுரு வித்தியாசாலை எனும் கல்விக்கூடம். வல்வெட்டித்துறை நகரத்தின் முதுசை இந்திய இராணுவச் சப்பாத்துக்கள் புண்ணாக்குவது வழமை. இராணுவம் இதயத்தைக் கிழித் தவிட்டுச் செல்லும். இரத்தம் பாய்ந்தோடும். அவ்விதயத்தின் சிறகுகளுக்குள்ளிருந்து புலிவீரர் வெளிவருவர். மீண்டும் புலிவேட்டைக்கு இராணுவ அரக்கர் வருவர். தருணம் பார்த்திருத்தார் புலிகள். – 1989ம் ஆண்டு 8ம் மாதம். ஒருநாள், அரக்கனின் பல் ஒன்று உடைந்து இரத்தம் வடிந்தது.
உடனே, ”வல்வைப் படுகொலை” எனும் கோரதாண்டவம் அரங்கேறியது. வல்வை நகரம் சுடுகாடாகியது. தீ நாக்குகள் நகரத்தைக் கரியாக்கின. விந்திரனின் இதயத் தீக்குச்சியிலும் ஒருசிறு பொறி தெறித்தது. ” போராட்டமே எமை மீட்கும் மீட்பர்.” போராட்டம் எனும் சிறகுக்குள் தன்னையும் புகுத்திக்கொண்டான். நடுக்கடலில் தத்தளிப்பவனுக்கு கட்டை கிடைத்தது போல் இவனுக்கு போராட்டம் எனும் கப்பல் கிடைத்தது.
இறுகப்பற்றக்கொண்டான், – 1990ம் ஆண்டு ஒருநாள். “மன்னாரிலிருந்து விசேட பயிற்சி முடித்துவிட்டு அணியொன்று வந்திருக்கின்றது” காற்று என் காதில் சேதி சொல்லிச் சென்றது. அவ்வணியில் விசேட பயிற்சி முடித்து விந்திரனும் ஒருவனாக வந்திருந்தாள். அகழ்ந்தெடுக்கப்பட்ட வைரத்திற்குபட்டை தீட்டப்பட்டிருந்தது.
என்னைக் கண்டதுமே அவன் முகம் பிரகாசமானது. அதே புனனகை, அதே கண்கள். ஆனால் ஒரு வித்தியாசம். தோளிலிருந்த ஆயுதம் சிறியதாகத் தோன்றியது. நேற்றைய தூற்றலுக்கு துளிர்த்த புற்கள் போல் மீசையும் அரும்பியிருந்தது.
சக போராளிகளிடம் என் வாயைக் கொடுத்தேன். விந்திரனின் திறமைகளைப் புகழ்ந்தார்கள். மீனுக்கு நீச்சல் எப்படியோ, பறவைக்கு பறத்தல் எப்படியோ, அப்படியே விந்திரனுக்கு பயிற்சிகளும் என்றனர்.
இவனை அடிக்கடி சக போராளிகள் சீண்டுவது வழக்கம். ஆனாலும் இவனுக்கு போபம் வராது. விந்திரனிடம் பேச்சுக் கொடுத்தேன்.
“எம் அணி கஜு வத்தை முகாம் தாக்குதலுக்குச் சென்றது. எங்களைச் சின்னப்பெடியள் என்று சொல்லி சப்ளை யில விட்டுவிட்டினம்” இதைக்கூறும்போது இவன் முகத்தில் மின்னலைக் காணமுடியவில்லை. இருளையே காணமுடிந்தது.
விந்திரன் அதிஷ்ரக்காரன். எவருக்குமே அரிதில் கிடைக்காத பணி அவனைத் தேடி வந்தது. அவனது திறமைக்குக் கிடைத்த அரும்பணி எமது தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாவல் அணிக்குத் தெரிவானான். எல்லாத் திசைகளுக்கம் ஒரே நேரத்தில் வெளிச்சம் தருகின்ற எம் தலைவரின் நிழலில் தவழும் பாக்கியம்.
போராட்டத்தேர் முன்னோக்கிச் சென்று கொண்டேயிருந்தது. இதுவரை காலமும் ஒரு சண்டைக்குக்கூட போகவில்லை எனும் கவலை அவனை வாட்டியது. பலவேகய இராணுவ நடவடிக்கைக்கு எதிராகச் செல்லும் அணியில் விந்திரனும் ஒருவன். செய்தி இதயத்தை பூந்தளிரால் தடவியது உயிரைப் பூவால் வருடிச் சென்றது. நுரையீரலுக்குள் இனிப்பூட்டிய காற்றுப் புகுந்தது.
இயக்கச்சி எமக்குச் சாதகமற்ற நிலப்பரப்பு. “ஓமர் முக்தார்” எதிரியை பாலைவனத்தில் எதிர்த்ததுபோல் சிறுசிறு பற்றைகளே எம் காப்பு. கரிய பெரியகளிறுபோல் எதிரியின் ராங்க்குகள். கார்த்திகை மாதத்து மழையென செல்கள். இவற்றிற்கு மத்தியில் விந்திரனின் கன்னிக்களம். பசித்திருந்தவனுக்கு பாலும் பழமும் கிடைத்தது. விந்திரனும் கிடைத்த சந்தர்ப்பத்தைத் திறமை யாகப் பயன்படுத்தினான் . பலரது பாராட்டுகளைப் பெற்றான்.
அவனது திறமை எனும் மூலதனத்திற்கு மீண்டும் பரிசு எனும் “லொட்டரி” விழுந்தது.
தேசியத் தலைவரின் உதவியாளர்களில் ஒருவனாகத் தேர்த்தெடுக்கப்பட்டான். ”ஸ்பிறிங்” கட்டிலின் மீது ஏறி நின்று துன்ளும் குழந்தை போல் இவனது உயிரின் ஒவ்வொரு அணுக்களும் மகிழ்ச்சியில் துள்ளின. தலைவரின் சிறகுகளிற்குள் இருந்தபடியே அவரது புத்திமதிகளையும் அறிவுரைகளையும் கேட்கும் பாக்கியம். வானத்தின் கீழ் சில சதுரமைல்களையே அறிந்துவைத்திருந்தவன், எட்டுத்திசைகளின் விளிம்புகளுக்கே சென்றான்.
தாமரை இதழ்மீதிருக்கும் சேறுபோல் போராளிகளுக்கு இருக்கும் அந்நியமொழிப் பெயர் கள் எல்லாம் தூயதமிழுக்கு மாற்றப்படவேண்டும். விந்திரன், எழிலரசன் ஆனான். அவனது பண்புக்கும் உருவத்திற்கும் ஏற்றமாதிரி தேசியத்தலைவரால் சூட்டப்பட்ட பெயர் இது.
1995ம் ஆண்டு சந்திரிகாவின் பேச்சு வார்த்தை . விரைவிலேயே முகத்திரை கிழிந்தது. அரசின கோரமுகம் தெரிந்தது. மீண்டும் சன்டைக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தது.
சண்டைக்குப் போதல் என்பது, ஒரு போராளியின் மனதைக் குளிர்விக்கின்ற மர்மமழை. போராட்ட வாழ்க்கையின் ஆறுதல் மந்திரம். சிறுபிள்ளைக்குக் கிடைத்த இனிப்பு. இதயத்தை மயிலிறகால் வருடுகின்ற இன்பசுகம்.
எழிலரசனுக்கு ஓர் இலக்கை வேவுபார்க்கும் பணிதரப்பட்டது. இதில் ஈடுபடும்போது ஏற்படும் அனுபவம் புதுமையானது. இருட்டை நண்பனாக்கி, எதிரியின் முள்ளுக்கம்பியினூடாக தவழுவதும் உருளுவதம், எதிரி அறியாமலே அவனது தலைவாசலில் நடமாடுவதும், அவன் அறியாமலே அவனது முக்காட்டை விலக்கி அவன் முகம் அறிவதும், இவையெல்லாம் சாதாரண மனிதரால் முடியாது. இரம்பையொத்த மனவுறுதி வேண்டும். எழிலரசனும் இரும்பையொத்தவன் தான். அவன் சென்றால் பழம் இன்றி வரும் நாட்கள் மிகக்குறைவு.
கடின மேற்பரப்பைக்கொண்ட சிப்பிக்குள் தான் ஒளிவீசும் முத்து உள்ளது. இவனுக்குள் மேலும் சில திறமைகள் ஒளிந்திருந்தன. இவன் ஒரு கலைஞனுங்கூட.
தேசத்தின் புயல்கள் , கரும்புலிகளின் வரத்தைச் சாற்றும் சலனப்படம். பொ. தாசனின் கைவண்ணத்தில் உருவான காவியம். மக்களின் இதயங்களைச் சிறுமுள்ளாகக் கீறி கண்ணீர் சிந்த வைத்த ஓவியம். இதில் ஒரு கரும்புலிவீரனாக எழிலரசன் நடித்திருந்தான்.
விடுதலைப் புலிகளின் தொடர் அதிரடிகளால் தென்னிலங்கையில் அரசுக்குப் பெரும் நெருக்கடி. நீர்ப்பாம்பென வழுக்கிச்செல்லும் தன் செல்வாக்கை உயர்த்தவேண்டும். எவ்விலை கொடுத்தாலும் பரவாயில்லை. ரத்வத்தவின் தலைமீது இப்போது கத்தி. முன்னோக்கிப் பாய்) தது சிங்களப்படை. புலிகளும் புலிப்பாய்ச்சலால் பதிலடி கொடுத்தனர். எழிலரசனுக்கும் பாயும் சந்தர்ப்பம் கிடைத்தது. அளவெட்டி அருணோதயாக் கல்லூரி தமிழரின் கல்விக்கூடம் சிங்களவனின் ஆயுதக்கூடமாக மாறியிருந்தது. புலிப்பாய்ச்சலின் ஓர் அம்சமாக இம் முகாம் மீது பட்டப்பகலில் பாய்ந்தனர் புலிவீரர்கள். முன்னணிக்காவலரண் ஒன்றின்மீது கைக்குண்டொன்றை எறிந்து சண்டை யைத் தொடக்கினான் எழிலரசன.
இராணுவம் எலியெனப் பின்வாங்கி ஓடியது. ஆயுதங்களைப் புலிவீரர் அள்ளினர்.
மீண்டும் அரசாங்கம் கண்டனங்களுக்குள்ளானது. மாங்காய் பிடுங்கும் போது பால் கண்ணுள் தெறித்த கதையாகியது. பச்சை மரத்திலுள்ள கிளியை சொண்டை வைத்து அடையாளம் காணலாம். ஆனால் புலிவீரரை எப்படிக் கண்டுபிடிப்பது?
ரத்வத்த தலையைச் சொறிந்தார். அடுத்த அடியை அவதானமாக வைக்கவேண்டும். மீண்டும் பாரிய படையெடுப்புக்கான ஆயத்தங்கள். காலுடைந்த சிங்களத்துக்குப் பச்சிலை வைத்துக் கட்டப்பட்டது. ஆயுதக்கப்பல்கள் கொழும்புத்துறைமுகத்தை நிறைத்தன. அங்குமிங்கும் இரும்புப் பறவை பறந்தது. கிழக்கிலிருந்தும் சிங்களப்படை வடக்கிற்கு நகர்ந்தது. பலாலி பச்சையுடைத் திருவிழாவானது. புலிகளும் ஆயுதங்களைத் துடைத்து எண்ணையிட்டனர். தமிழர் சேனை தயாராகியது. எழிலரசன் ஒரு செக்சன் லீடராக நியமிக்கப்பட்டான், கடும் பயிற்சிகள் நடந்தன. ஒழுங்கு, வேகம், உருமறைப்பு, எல்லாவற்றிலும் திறமையாகச் செயற்பட்டு எழிலரசனின் அணி பாராட்டுகளைப் பெற்றது. எல்லோருக்கும் இவனது அணியே முன்னு தாரணமாகக் காட்டப்படுவது வழக்கமாகியது. கூட்டத்தில் முன்னணியில் பறக்கும் கொக்குப் போல, இவனும் எப்போதும் எல்லாவற்றிலும் முன்னணியிலேயே நின்றான்.
1995 10ம் மாதம் முதலாந்திகதி, இடி முழக்கம் எனும் பெயரில் இடி இடித்தது. மழைக்காலத்து ஈசல்கள் போல் இராணுவம் முன்னேறியது. அச்சுவேலி, புத்தூர்ப்பிரதேசம் பச்சையுடையானது. இதற்கு எதிராக ஒரு தாக்குதல். எழிலரசன் இத்தாக்குதலின்போது விழுப்புண்ணுற்றான். இத்தாக்குதலில் நினைத்த வெற்றியை எம்மால் பெறமுடியவில்லை. ஆனாலும் எதிரிக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.
இதே மாதம் பதினேழாம் திகதி. சூரியக்ககதிர் யாழ்குடாவைச் சுட்டெரித்தது. எழிலரசன் குணமடைந்தான். இவன் குறிபார்த்துச் சுடுதலில் மிகத் திறமைமிக்கவனாக இருந்தான். இவனது சூடுகள் அனேகமாகப் பத்துக்களுடனேயே உறவாடுவது வழக்கம். எப்போதாவது ஒன்பதுகளுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ளும். இத்திறமை இவனை வேறொரு பணிக்கு இட்டுச்சென்றது. குறுகியகாலப் பயிற்சி முடிந்து ஒரு பதுங்கிச்சுடும் வீரனாக சூரியக்கதிரை சட்டெரிக்கப் புறப்பட்டான். யாழ்நகரத்தின் தலைவாசலில் இராணுவம் வந்திருந்தது. நாவனர் வீதிச்சண்டை எழிலரசனின் திறமைக்குச் சான்றானது. ஒரேநாளில் பல இராணுவத்தினர் எழிலின் துப்பாக்கிக்கு அடிபணிந்தனர்.
யாழ்குடாநாட்டின் இதயத்தை சப்பாத்துக்கள் நசித்தன. அன்றலர்ந்ததாமரை போலிருந்த யாழ்மண் அரக்கனின் காலடியில் கசங்கியது. தந்தரோபாயமாக புலிவீரர் வன்னிக்கு வந்தனர். எழிலரசனின் பணி வன்னியிலும் – தொடர்ந்தது. மேலதிக பயிற்சிக்காக அனுப்பப்பட்டான். பயிற்சி என்பது அவனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. பதுங்கிச்சுடும் சூட்டுப்பயிற்சியின்போது அவனது சூடுகள் இலக்கை முத்தமிடத்தவறுவதில்லை. “பட்டிருக்கும்” என்று அவன் கூறினால் அந்தரவை கண்டிப்பாக மையத்தை ஊடுருவிருக்கும் இது பிசகிவிட்டது’ என்று அவன் கூறினால் இலக்கைப் போய்ப்பார்க்கத் தேவையில்லை.முன்கூட்டியே தன் சூடுகளை மதிப்பிடும் திறன் அவனுக்கேயுரியதாகும்,
வன்னியில் இவனது முதற்களம் ஓயாத அலைகள் நடவடிக்கையாகும் வெண்கலக்கடையில் யானை புகுந்தது மாதிரி முல்லைத்தீவு முகாம் சின்னாபின்னப்படுத்தப்பட்டது. இதில் எழிலுக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. ஆனால் சத்ஜய நடவடிக்கையில் இவனது துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட பல ரவைகள் எதிரி இரத்தத்தின் சுவையை அறிந்து கொண்டன. சண்டை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
இவனது நிலைக்கு அண்மையாக ஒரு போராளியின் உயிரற்ற உடல் வெய்யிலுக்குள் கிடந்தது. இவனது இதயத்தை குண்டூசி ஒன்று கீறிச்சென்றது. உயிர் பிரிந்தபின்பும் நண்பனின் உடல் வெய்யிலில் வேகக்கூடாது. எறிகணைகளின் சீறலுக்கு மத்தியிலும் ஓடிச் சென்று அவ்வித்துடலை நிழலில் வைத்துவிட்டு வந்தான். பின் எடிபலவில் இவனது துப்பாக்கி ரவைகளைத் துப்பியது.
எந்நேரமும் எதிரி இலக்குகளைத் தேடித்திரிவதே இவனது பொழுது போக்கு. காவலரணில் எதிரியின் தலைக்கறுப்பு. ஒரு குடுதான்; எதிரியின் ‘கெல்மற்” சிவந்திருக்கும்.
நாட்காட்டி சுருங்கியது. “ஜயசிக்குறுய்,” திடமான பெயரிட்டான் எதிரி – காவியுடுப்புக் காரர் நல்லநாள் பார்த்துக் கொடுத்தனர். வன்னியின் இதயத்தை கிழிப்பதே நோக்கம். ”வாங்கடா, வழி மேல் விழிவைத்துள்ளோம்.”புலிவீரரும் திடம் கொண்டனர். மாரி, தவளைபோல் வானொலிகள் வெற்றிமுழக்கமிட்டன. புலிகள் அழிந்தனர். போர் முடிந்தது. பழம் பறிக்கும் நேரத்துக்காகக் காத்திருந்தனர் புலிகள். தான்டிக்குளத்தில் முதல் தூண்டில். ரத்வத்தவன் வாய் கிழிந்தது. பெரியமடுவில் ஆப்பிழுத்தகுரங்கானது.
எழிலரசன் படையணிக்கு மாற்றப்பட்டான்.ஓர் அணியை பொறுப்பேற்றான். இவனது அணியும் திறமைமிக்கதாயிருந்தது. ஓமந்தையில் வந்து நின்று, பட்ட காயங்களுக்கு எதிரி புனுகு பூசிக்கொண்டிருந்தான். 1.8.97 அன்று எதிரியின் காவலரண்கள் மீது புலிகள் ஏறிநடந்தனர். முதல் இரண்டு ஊடறுப்புத் தாக்குதலுக்கும் செல்லவில்லை யென்ற ஆதங்கம் எழிலரசனிடம் இருந்தது.
இத்தாக்குதலில் அவனது துப்பாக்கியிலும் நெருப்புப்பூத்தது. அழகுக்கு மயில்
பேச்சுக்கு கிளி, தந்திரத்துக்கு நரி, இல்லையில்லை புலிவீரர் வேகத்துக்குச் சிறுத்தை, இல்லவேயில்லை, இதற்கும் புலிவீரர் ஓமந்தையில் நிரூபணமாயிற்று. பொயின்ற் எலலாம் பிடிச்சிட்டம் . இப்ப கிளியர் பண்ணி கொண்டிருக்கிறம். ஆமியின்ர பொடிகள், ஆயுதங்கள் எல்லாம் நிறையக் கிடக்குது. ‘ எழிலின் குரல் ஓமந்தையில் கேட்டவண்ணமேயிருந்தது.
மழை பொழிவது மண்ணுக்கு தன்னை அர்ப்பணிக்கவே. காற்று வீசுவது உலகம் உயிருடனிருக்க வே. மரங்கள் வாழ்வது உயிர்களை வாழவைக்கவே. மெழுகுதிரி தன்னை உருக்குவது உலகிற்கு வெளிச்சம் தரவே. புலிவீரர் வீழ்வது தமிழீழ விடியலுக்கே.
கூவிவந்த செல்லொன்று எழிலரசனின் அருகே வீழ்ந்து வெடித்தது. வெற்றியில் பூரித்திருந்தவன. தலையை – சிதறுதுண்டொன்று தாக்கியது. ஓமந்தை மண்ணில் அவனது குருதி படர்ந்தது. தமிழீழக் காற்றோடு அவனது உயிர் கலந்தது.
மரணத்தால் உன் உயிரைத் திருடமுடிந்தது. உன் புன்னகையை, பொலிவை அதனால் திருடமுடியவில்லை உனது குரல், உனது குறும்பு. என் இதயத்தில் இன்னும் பசையாய் ஒட்டியிருக்கிறது. எனக்கு தாகமெடுக்கும் போதெல்லாம் இப்போதும் என் அருகில் நீரோடையாய் ஓடி வருகிறாய் நீ உன்னை விதைகுழியில் வைத்து ஒருபிடி மண்போட்டேன். போட்டதும் கையைத் திறந்தேன். அதிலும் உன் முகந்தான். ஆயிரமாயிரம் மாவீரருடன் நிம்மதியாக நீயும் உறங்கு. மழையின் பயணம் மண்ணைத் தொடும் வரை ஓயாது. எமது பயணமும் தமிழீழம் காணும்வரை ஓயாது.
– விடுதலைப்புலிகள் இதழ்