இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட ‘ஆண்டர்சன் – சச்சின் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து, 2–1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் நேற்று லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது.

லேசான மழைத் துாறல் காரணமாக, ‘டாஸ்’ நிகழ்வு 3 நிமிடம் தாமதம் ஆனது. இதில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் போப், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாகூர், கம்போஜ் நீக்கப்பட்டனர். காயம் காரணமாக ரிஷாப் பன்ட், பணிச்சுமை காரணமாக பும்ரா விலகினர். இதனால் துருவ் ஜுரல், பிரசித் கிருஷ்ணா, கருண் நாயர், ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குல்தீப், அர்ஷ்தீப் இடம் பெறவில்லை.
இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், ராகுல் ஜோடி துவக்கம் தந்தது. வானம் மேகமூட்டமாக காணப்பட, பந்து நன்றாக ‘சுவிங்’ ஆகின. இதனால் ரன் சேர்க்க திணறிய ஜெய்ஸ்வால் (2), அட்கின்சன் பந்தில் அவுட்டானார். ராகுலுடன் இணைந்தார் சாய் சுதர்சன். வோக்ஸ் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். 16வது ஓவரை வீசிய வோக்ஸ், முதல் பந்தில் ராகுலை (14) போல்டாக்கினார். இந்திய அணி 38/2 ரன் என தடுமாறியது.
சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் இணைந்து போராடினர். டங்க் பந்தில் சுதர்சன், ஓவர்டன் பந்தில் சுப்மன் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். இந்திய அணி 52/2 ரன்களை எட்டியது. தொடர்ந்து வோக்ஸ் பந்துகளில் அவ்வப்போது பவுண்டரி அடித்தார் சுதர்சன்.
உணவு இடைவேளைக்கு 10 நிமிடம் முன்னதாக பலத்த மழை வர, போட்டி நிறுத்தப்பட்டது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 72/2 ரன் எடுத்திருந்தது.
மழை தாமதம் பின் 2 மணி நேரம், 10 நிமிடத்துக்குப் பின் ஆட்டம் துவங்கியது. ஓவர்டன் பந்தில் சுப்மன் ஒரு பவுண்டரி அடித்தார். இவர் 21 ரன் எடுத்திருந்த போது, அட்கின்சன் பந்தை எதிர்கொண்டார். அருகில் பந்தை அடித்து விட்டு, ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடினார் சுப்மன். இதற்குள் பந்தை எடுத்த அட்கின்சன், ‘ஸ்டம்சை’ தகர்க்க, சுப்மன் வீணாக ரன் அவுட்டானார்.
பின் மறுபடியும் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டு, மீண்டும் துவங்கியது. இம்முறை சுதர்சன் (38) அவுட்டானார்.ஜடேஜா (9), ஜூரல்(19) நிலைக்கவில்லை. பின் கருண் நாயருடன் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், நிதான ஆட்டம் ஆடி, மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்,
இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் 6 விக்கெட்களை இழந்து 204 ரன் எடுத்திருந்தது.கருண் நாயர் (52), வாஷிங்டன்(19) அவுட்டாகாமல் இருந்தனர்.