திருகோணமலை மூதூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கட்சிழமை (04.08.2025) திருகோணமலை மட்டிக்களி லகூன் பூங்காவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 19 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை எனவும் புதிய அரசாங்கத்தின் ஆட்சியிலாவது நீதி கிடைக்க வேண்டும் எனவும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள் மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதன்போது 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இப்படுகொலையில்
1. ரிச்சட் அருள்ராஜ் (வயது – 24)
2. முத்துலிங்கம் நர்மதன் (வயது – 23)
3. சக்திவேல் கோணேஸ்வரன் (வயது – 24)
4. துரைராஜா பிரதீபன் (வயது – 27)
5. சிவப்பிரகாசம் ரொமிலா (வயது – 25)
6. கணேஷ் கவிதா (வயது – 27)
7. எம். ரிஷிகேசன் (வயது – 24)
8. அம்பிகாவதி ஜெசீலன் (வயது – 27)
9. கனகரத்தினம் கோவர்த்தனி (வயது – 27)
10. வயிரமுத்து கோகிலவதனி (வயது – 29)
11. ஏ.எல்.மொகமட் ஜௌபர் (வயது – 31)
12. யோகராஜா கோடீஸ்வரன் (வயது – 30)
13. சிங்கராஜா பிறீமஸ் ஆனந்தராஜா (வயது – 32)
14. ஐ. முரளிதரன் (வயது – 33)
15. கணேஷ் ஸ்ரீதரன் (வயது – 36)
16. முத்துவிங்கம் கேதீஸ்வரன் (வயது – 36)
17. செல்லையா கணேஷ் (வயது – 54) ஆகியோர் கொல்லப்பட்டிருந்தார்கள்.
மூதூர் பொது வைத்தியசாலைக்கு அருகில் இயங்கிவந்த அக்ஷன் பாம் எனும் சர்வதேச தொண்டர் நிறுவனத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த மேற்படி 17 பணியாளர்களையும் ஆயுதம் தரித்த சீருடைக்காரர்கள் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்து நிலத்தில் குப்புறப் படுக்கப்பண்ணி பின்பக்கமாக தலையில் சுட்டு படுகொலை செய்ததாக அன்றைய செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.