மோசடி நிதி நிறுவனங்களை அடையாளம் காணவும், பல கோடி ரூபாய் சுருட்டிய நபர்கள் குறித்து துப்பு துலக்கவும், நுண்ணறிவு பிரிவு போலீசார் 38 பேர் இதற்கென நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நடக்கும் மோசடிகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, பொருளாதார குற்றப்பிரிவில், கூடுதல் டி.ஜி.பி., முதல் கான்ஸ்டபிள் வரை 462 பேர் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது நிதி நிறுவனங்கள், 4.25 லட்சம் பேரிடம், 13,295 கோடி ரூபாய் மோசடி செய்தது குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்தாண்டு மட்டும் பொருளாதார குற்றப்பிரிவில், 18,860 பேர் புகார் அளித்துள்ளனர். அவற்றில், 1,427 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
நிதி நிறுவன மோசடி தொடர்பாக, ஆண்டுக்கு, 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுகின்றனர். தற்போது, 516 வழக்குகள் விசாரணையில் உள்ளன. மோசடி நபர்களின், 4,133 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்க முடிவு செய்துள்ளோம்.
இது போன்ற மோசடி நிதி நிறுவனங்களை அடையாளம் காணவும், ஏற்கனவே பண மோசடி செய்து, தலைமறைவாக இருக்கும் நபர்கள் குறித்து துப்பு துலக்கவும், நுண்ணறிவு பிரிவு போலீசார் 38 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு தப்பியுள்ள 16 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, விமான நிலையங்களுக்கு, ‘லுக் அவுட் நோட்டீஸ்’ வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இரண்டு பேரை சர்வதேச போலீசார் உதவியுடன் கைது செய்ய வசதியாக, ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ வழங்கி உள்ளோம். – இவ்வாறு அவர்கள் கூறினர்.