‘ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில், வண்டல் மற்றும் களிமண் எடுக்க, விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்வோர், 55,923 பேருக்கு, ‘ஆன்லைன்’ முறையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது’ என, கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில், வண்டல் மண், களிமண், சவுடு மண் போன்றவை எடுக்க, கனிமவளத்துறை ஒப்புதல் வழங்கும். இதில், பெரும்பாலும் தனியார் ஒப்பந்ததாரர்கள் அனுமதி பெற்று, அதிக அளவில் மண் எடுத்து விற்பனை செய்கின்றனர். பெரும்பாலான இடங்களில் அனுமதிக்கப்படும் அளவை விட, அதிகமாக மண் எடுக்கப்படுவதால், நீர்நிலைகளில் சூழலியல் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
தனியார் ஒப்பந்ததாரர்களை கண்காணித்தாலும், இதை தடுக்க முடியாத சூழல் நிலவுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில், விவசாயிகள், மண்பாண்டம் செய்வோருக்கு, தேவையான மண் கிடைப்பதில் பிரச்னை இருப்பதாக புகார் எழுந்தது. இவர்கள் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் மண் வாங்க, அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது.
இதற்கு தீர்வாக, விவசாயிகள், மண் பாண்டம் செய்வோருக்கு, தேவையான மண் இலவசமாக கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, விவசாயிகள், மண்பாண்டம் செய்வோர், www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, மண் எடுக்க அனுமதி பெறலாம்.
கடந்த ஓராண்டில் மட்டும், 55,923 பேர், மண் எடுக்க அனுமதி பெற்றுள்ளனர். அவர்கள், 21,073 நீர்நிலைகளில் இருந்து, எவ்வித கட்டணமும் இல்லாமல் மண் எடுத்துள்ளனர்.
இத்தகவலை கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.