வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏழை மற்றும் நடுத்தர மக்களை குறிவைத்து, போலி டாக்டர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் குவிந்தன.

இதையடுத்து, ஜனவரியில் சிறப்புக்குழு அமைத்து மாநிலம் முழுதும் ஆய்வு நடத்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, அசாமின் சில்சாரில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு டாக்டராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த புலோக் மலகார் மீது சமீபத்தில் புகார் எழுந்தது.
தொடர்ந்து, அவரது சான்றிதழ்களை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சில்சாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு, ‘சிசேரியன்’ எனப்படும், மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த போது, புலோக் மலகாரை போலீசார் கைது செய்தனர்.
அசாமின் ஸ்ரீபூமி பகுதியைச் சேர்ந்த இவர், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., திரைப்படத்தைப் போல் போலி டாக்டராக நடித்ததுடன், தன் பணிக்காலத்தில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணியருக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்தது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து புலோக் மலகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, அவரை ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.