ரூ.17 ஆயிரம் கோடி கடன் மோசடி தொடர்பான வழக்கில் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி(66). இவரது நிறுவனங்கள் வங்கிகளில் 17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு சொந்தமான வீடு மற்றும் பல்வேறு நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தியிருந்தனர்.
இச்சோதனை அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இதனை ஏற்று, டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று நண்பகல் அனில் அம்பானி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மோசடி தொடர்பாக பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. இதன் பிறகு அவர் கிளம்பிச் சென்றார். அடுத்தவாரம் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
விசாரணையின் போது அவரிடம், கடனை போலி நிறுவனங்களுக்கு திருப்பி விட்டது குறித்தும், அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டதா என்பது குறித்தும், அதிகாரிகளுக்கு லஞ்சம் ஏதும் வழங்கினாரா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. அவற்றில் பெரும்பாலான கேள்விக்கு தனக்கு தெரியாது என அனில் அம்பானி பதிலளித்ததாக தெரிகிறது.
இந்த வழக்கில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் மூத்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர். மேலும், விசாரணையின் போது அனில் அம்பானி உடன் வழக்கறிஞர் இருக்க அனுமதிக்கப்படவில்லை. விசாரணை முழுவதும் வீடியோப் பதிவு செய்யப்பட்டுள்ளது.