செம்மணி விவகாரம் தொடர்பில் ஒருசில பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு செல்கிறார்கள். செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நிதி விடுவித்துள்ளது. மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்க ளென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06.08.2025) நடைபெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தை நீதியமைச்சர் காது வழி செய்து என்று குறிப்பிட்டதாக நேற்று (நேற்று முன்தினம்) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் குறிப்பிட்டார்.இது முற்றிலும் தவறானது. நீதியமைச்சர் குறிப்பிட்ட விடயத்தை நான் தெளிவாக கேட்டிருந்தேன்.
செம்மணி மனிதப்புதைக்குழி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் உரையாற்றுகையில் திருகோணமலை, மண்டைத்தீவு பகுதியில் உள்ள மனிதப்புதைக்குழிகள் பற்றி குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் அனுமானத்தின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க முடியாது.
பொலிஸ் அல்லது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளியுங்கள். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார். இந்த விடயத்தை ஒரு தரப்பினர் திரிபுப்படுத்தி பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறானதொரு செய்தியை கொண்டு செல்கிறார்கள்.
செம்மணி விவகாரம் தொடர்பில் ஒருசில பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு செல்கிறார்கள். செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நிதி விடுவித்துள்ளது. மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். எமது ஆட்சியே தொடரும் ஏனெனில் நாங்கள் மக்களுக்கு உண்மையாக செயற்படுகிறோம் என்றார்.