சாலை வசதி கர்நாடகாவில் செயல்படும், பி.டி.ஏ., எனப்படும், பெங்களூரு மேம்பாட்டு ஆணையம், பொதுமக் களுக்கு குறைந்த விலையில் வீடுகள், மனைகள் மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்தி தருகிறது.

தற்போது, தெற்கு பெங்களூரை முதன்மையாக வைத்து, 6,217 ஏக்கர் பரப்பளவில் ஆறு புதிய குடியிருப்பு பகுதிகளை உருவாக்க உள்ளது.
மேலும், 10 வழிச்சாலை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, தெற்கு பெங்களூரில் உள்ள பி.எம்., காவல், கக்கள்ளிபுரா, ஹூலிமங்களா, ஹூலஹள்ளி உட்பட 22 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த உள்ளது.
இதற்கு மாநில அரசின் அனுமதி கிடைத்து உள்ளது.
இந்த குடியிருப்பு பகுதிகள் ஓசூர் சாலை, மைசூரு சாலை, பெரிபெரல் ரிங் ரோடு ஆகியவற்றை ஒட்டி உருவாக்கப்படும்.
இப்பகுதியில் அமைக்கப்படும் பத்து வழிச்சாலையால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்திற்காக, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு, பி.டி.ஏ., சட்டம் 1976ன் படி, நிலத்தின் மதிப்பில் 40 சதவீதம் பணம், மீத மதிப்புக்கு வேறு இடங்களில் நிலம் வழங்கப்படும்.
எதிர்ப்பு இத்திட்டம், பி.டி.ஏ.,வால் மேற்கொள்ளப்படும் நான்காவது பெரிய நிலம் கையகப்படுத்தும் திட்டம் ஆகும்.
ஏற்கனவே, சர்ஜாபூரில் தொழில்நுட்ப பூங்காவிற்கு, 1,500 ஏக்கர்; தொட்டபல்லாபூர், டாபஸ்பேட்டை அருகே குயின் சிட்டிக்கு, 1,500 ஏக்கர்; பிடதி டவுன்ஷிப்புக்கு, 9,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
அதே நேரம், இத்திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
‘மாநில அரசு, நிலத்துக்கு குறைந்த இழப்பீடு வழங்கும்; வலுக்கட்டாயமாக நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடும்’ எனவும் கூறுகின்றனர்.
மேலும், இத்திட்டத்தால் வனப்பகுதிகள் அழியும் என்பதுடன், விலங்குகள் – மனித மோதல் ஏற்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.