தமிழ் சமூகத்தில் கல்வி கற்றுத் திறமை பெற்றவர்கள், அரசின் முக்கிய பதவிகளில் பணி புரிபவர்கள், தங்களை “புத்திஜீவிகள்” என்று பெருமைப்படுத்திக் கொள்வது இயல்பு. ஆனால், அவர்கள் தங்கள் சொந்த தமிழ் இனத்திற்கு செய்யும் தீங்குகள், வரலாற்று துரோகங்கள் மற்றும் காழ்ப்புணர்ச்சி நிரம்பிய சொற்பிரயோகங்கள் — இவை அனைத்தும் வரலாற்றில் கண்டனத்துக்குரிய பாவச்செயல்களாகவே பதியும்.

இத்தகைய செயல்கள், தமிழர்களின் போராட்ட வரலாற்றைச் சீரழிக்கும் நோக்கத்துடன், காலப்போக்கில் தமிழர் சமூகத்தை ‘குற்றப்பரம்பரை’ போல் சித்தரிக்கும் அபாயத்தை உருவாக்குகின்றன. எதிர்கால தலைமுறையில், விடுதலைப் போராட்டத்தின் உண்மை நோக்கம் மாறுபடுத்தப்பட்டு தவறாக கற்பிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இத்தகைய நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து, வரலாற்று உண்மைகளைப் பாதுகாக்க வேண்டும்.
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளை அவமதிக்கும் அரச உத்தியோகபூர்வ கடிதம்
சமீபத்தில், மன்னார் மாவட்ட சுகாதார சேவைகளின் பிராந்திய இயக்குநர் வைத்தியர் விநோதன் அவர்களால் வெளியிடப்பட்ட ஒரு உத்தியோகபூர்வ கடிதம், தமிழ் சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில், “Ex. LTTE Terrorist” என்று குறிப்பிட்டு, ஒரு பெண் குடும்ப சுகாதார அதிகாரியின் கணவரை அவமதித்துள்ளார்.
இது வெறும் சொற்பிழை அல்ல — இது ஒரு அரச சின்னம் பொறித்த உத்தியோகபூர்வ ஆவணத்தில், திட்டமிட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, தமிழர் சமூகத்தின் போராட்ட வரலாற்றையும் வீரர்களின் தியாகத்தையும் அவமதிக்கும் செயல்.
சட்ட ரீதியான பிரச்சனை
இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) இன்னும் அமலிலேயே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், ஒரு முன்னாள் போராளியை “பயங்கரவாதி” என்று உத்தியோகபூர்வ ஆவணத்தில் குறிப்பிடுவது, அந்த நபரின் உயிர், குடும்ப பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தும்.
மேலும், இலங்கை இராணுவம் கூட தங்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் “முன்னாள் வி.பு உறுப்பினர்கள்” (Ex-LTTE members / rehabilitated cadres) என்று மட்டுமே குறிப்பிடும் போது, ஒரு சுகாதார துறை அதிகாரி இப்படிப்பட்ட சொல் பயன்படுத்துவது நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கடுமையான குற்றமாகும். இது அரச சேவையின் ஒழுங்கு விதிமுறைகளுக்கும் முரணானது.
சமூக மற்றும் அரசியல் விளைவுகள்
இப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகம்:
சமூகத்தில் முன்னாள் போராளிகளை “நிரந்தர குற்றவாளிகள்” போலக் காட்டுகிறது.
தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றைச் சீரழிக்கிறது.
எதிர்கால தலைமுறையில் விடுதலைப் போராட்டம் குறித்த தவறான கருத்தை உருவாக்குகிறது.
தமிழ் சமூகத்தின் ஒன்றுபட்ட குரலைப் பிளக்குகிறது.
வரலாற்று உண்மையை பாதுகாக்க வேண்டிய அவசியம்
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுமார் 12,000 பேர், “புனர்வாழ்வு” என்ற பெயரில் சமூகத்தில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் சிறந்த காலத்தை தமிழ் மக்களின் உரிமைக்காக அர்ப்பணித்தவர்கள். அவர்களின் மீதமுள்ள வாழ்நாளை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதே மனித உரிமை மற்றும் நீதியின் அடிப்படை.
தமிழர் சமூகத்தின் வலியுறுத்தல்
வைத்தியர் விநோதனின் இந்த நடவடிக்கை — அது திட்டமிட்ட அரசியல் நோக்கம் கொண்டது என்பதை, அவரது தேசிய மக்கள் சக்தி (JVP) ஆதரவு பின்னணி வெளிப்படுத்துகிறது. இந்தக் கடிதம், தமிழர் போராளிகளை “பயங்கரவாதிகள்” என சித்தரித்து, தமிழ் சமூகத்தின் மனதை புண்படுத்தும் செயல் என்பதால்:
● அவர் உடனடியாக தமிழ் மக்களிடம் பொது மன்னிப்பு கோர வேண்டும்.
● தனது தவறான வார்த்தைப் பிரயோகத்தை எழுத்து மூலமாக வாபஸ் பெற வேண்டும்.
● இல்லையெனில், தமிழர் சமூகம் அவரைத் தங்கள் சமூக, அரசியல் மற்றும் கலாச்சார வட்டாரங்களில் முற்றிலும் ஒதுக்கி விட வேண்டும்.
முடிவுரை:
தமிழினத்தின் அடையாளம், வரலாறு மற்றும் வீரர்களின் தியாகம் ஆகியவை எங்கள் சமூகத்தின் பெருமை. இவற்றை அழிக்கும் எந்த முயற்சியும், அது எவ்வளவு உயர் பதவியில் இருப்பவரால் செய்யப்பட்டாலும், எதிர்க்கப்பட வேண்டும். இன அழிப்பு திட்டங்களுக்கு துணை நிற்கும் எந்த “புத்திஜீவியையும்” வரலாறு மன்னிக்காது — தமிழர் சமூகமும் ஒருபோதும் மன்னிக்காது.

எழுதியவர்
ஈழத்து நிலவன்
11/08/2025


இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துகளே தவிர, அவை அமிழ்துவின் தலையங்க நிலைப்பாட்டைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.