முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் இருந்து உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பொறுப்பின் கீழ் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அத்துடன் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருடுவதற்கு முற்பட்டவர்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே குறித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் எந்தவித தலையீடும் இன்றி விசாரணை நடவடிக்கைகள் வெளிப்படையாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்தையன் கட்டு இடதுகரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் எனும் இளைஞர் காணாமல் போயிருந்தார். தொடர்ச்சியாக அப்பிரதேச மக்களால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் கடந்த 9ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த இளைஞர் உள்ளிட்ட 5 பேர் முத்தையன்கட்டு குளத்துக்கு அண்மித்து அமைந்துள்ள 63 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாமுக்கு சென்றிருந்த தருணத்தில் இராணுவத்தினரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த பின்னணியில் இந்த சம்பவத்துக்கு நீதி வேண்டும் எனவும் இராணுவத்தினரே குறித்த இளைஞரின் மரணத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் பொலிஸ் ஊடகப்பிரிவு இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சம்பவத்தை தெளிவுபடுத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;
முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் ஒட்டுச் சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப்படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்கு அண்மைய நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி இரவு குறித்த முகாமையில் அகற்றப்பட்ட இரும்பு மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்வதற்காக முகாமின் வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஐந்து பேரை வெளியேற்றுவதற்காக முகாமில் இருந்த இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்போது தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் முத்தையன்கட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பொறுப்பின் கீழ’ விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் குறித்த 5 பேரும் முகாம் வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்களை விரட்டியடிக்க முற்பட்ட போது அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து குறித்த முகாமில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த பொருட்களை திருடுவதற்கு சந்தேக நபர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் மேலும் இரு இராணுவ சிப்பாய்கள் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய சந்தேகநபர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எந்தவித தலையீடும் இருக்காது. விசாரணை நடவடிக்கைகள் வெளிப்படையாகவும் தராதரம் பாராமல் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.