அடிப்படை உரிமைகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியப்பாடு உடைய எந்தவொரு உத்தேச சட்டம் தொடர்பிலும் ஆணைக்குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் ஆரம்பத்திலேயே பெறப்படவேண்டும். அதற்கமைய அரச சார்பற்ற அமைப்புக்கள் சட்டமூல வரைபின் பிரதியை இயலுமானவரை விரைவாக தமக்கு அனுப்பிவைக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் எல்.ரி.பி.தெஹிதெனியாவினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி.செனெவிரத்னவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
உங்களது அமைச்சின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டிருக்கும் அரச சார்பற்ற அமைப்புக்கள் (பதிவுசெய்தல் மற்றும் கண்காணித்தல்) சட்ட வரைபு தொடர்பில் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.
இச்சட்ட வரைபானது அரச சார்பற்ற அமைப்புக்களைப் பதிவுசெய்தல் மற்றும் கண்காணித்தல் என்பவற்றுக்கு வாய்ப்பு ஏற்படுத்துவதையும், 1980 ஆம் ஆண்டு 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவை அமைப்புக்கள் சட்டத்தை நீக்குவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறது என அறியமுடிகிறது.
இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 10(சி) பிரிவின்கீழ் எமது ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை நிறைவேற்றுவதற்கு அரச சார்பற்ற அமைப்புக்கள் சட்ட வரைபின் பிரதியொன்றை எமக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் தொடர்பில் எமது ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சில அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுகளில் உள்வாங்கப்பட்டன என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
அந்தவகையில் அரச சார்பற்ற அமைப்புக்கள் (பதிவுசெய்தல் மற்றும் கண்காணித்தல்) சட்டமூலமானது உங்களது அமைச்சினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னரேயே அதுகுறித்து அவதானிப்புக்களையும், பரிந்துரைகளையும் முன்வைக்கக்கூடிய நிலையில் ஆணைக்குழு இருக்கிறது.
ஆனால் பொதுவாக அடிப்படை உரிமைகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியப்பாடு உடைய எந்தவொரு உத்தேச சட்டம் தொடர்பிலும் ஆணைக்குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் ஆரம்பத்திலேயே பெறப்படவேண்டும். இவ்வாறானதொரு பின்னணியில் அரச சார்பற்ற அமைப்புக்கள் சட்டமூல வரைபின் பிரதியை இயலுமானவரை விரைவாக ஆணைக்குழுவுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.