ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், கடந்த 2024 ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில், ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ நடந்தது. இதில் உலகெங்கும் இருந்து முருக பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆற்றிய உரைகள், ஆதீனங்களின் ஆசியுரைகள், வெளிநாட்டினரின் கட்டுரைகள், விருது பெற்றவர்களின் சிறப்புகள், ஆய்வரங்கில் வாசித்ததில் சிறந்த கட்டுரைகள், பேச்சாளர்களின் வாழ்த்துரைகள் போன்றவை அடங்கிய சிறப்பு மலரை, அறநிலையத் துறை தயாரித்துள்ளது.
இதை கடந்த ஜனவரி 4ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். 288 பக்கங்கள் கொண்ட இந்நுாலின் விலை, 2,750 ரூபாய்.
குற்றச்சாட்டு இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரின் வாழ்த்துரைகள் இடம்பெற்று உள்ளன. மலரில் இடம்பெற்றுள்ள படங்களில் ஸ்டாலின், உதயநிதி, சேகர்பாபு படங்களே நிறைந்துள்ளன.
முருகன் பெயரில் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள மலர் தயாரித்து, அதை பக்தர்களிடம் கட்டாயப்படுத்தி விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பா.ம.க., தலைவர் அன்பு மணி: பழனி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம், ‘முருக பெருமான் வரலாறு’ என்று கூறி, 2,700 ரூபாய் விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப் படுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், ‘முருகன் வரலாறு’ என்று கூறி விற்பனை செய்யப்படும் நுாலின் பெரும்பாலான பக்கங்களில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரின் கருத்துகளும், அவர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பது தான்.
அய்யோ பாவம்… தி.மு.க., ஆட்சியாளர்களின் அகராதியில்,’ஆண்டவர்’களை விட, ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது பக்தர்களுக்கு தெரியாது.
ரசீது தரவில்லை ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார்: ஓசூர் பா.ஜ., நிர்வாகி நாகராஜ், பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய, கடந்த 8ம் தேதி சென்றுள்ளார்.
கோவில் அலுவலகத்தில் சிறப்பு தரிசன டிக்கெட் கேட்ட அவரிடம், 2,750 ரூபாய் கொடுத்து, முருகன் மாநாடு சிறப்பு மலர் வாங்கினால், ஐந்து பேர் சிறப்பு தரிசனம் செய்யலாம் எனக் கூறியுள்ளனர் .
அதன்படி புத்தகத்தை வாங்கிய அவருக்கு ரசீது தரவில்லை.
விற்பனையாகாத முருகன் மாநாட்டு புத்தகத்தை கட்டாயப்படுத்தி விற்பது கண்டனத்திற்குரியது. இந்த மலரில் முருகன் புகழ் பாடியதை விட, முதல்வர் ஸ்டாலினைதான் அமைச்சர் சேகர்பாபு அதிகம் புகழ்ந்துள்ளார். – இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.